Published : 29 May 2020 02:12 PM
Last Updated : 29 May 2020 02:12 PM

எங்களையும் முடக்கிப் போட்ட கரோனா பொது முடக்கம்: விளம்பரத் தொழிலில் இருப்போரின் துயரம்

மினேஷ்

கரோனா பொது முடக்கம் விளம்பரப் பலகை, விளம்பர வாகனத் தொழில் செய்வோரையும், சுவர் விளம்பரப் பணி செய்யும் தொழிலையும் அடியோடு முடக்கியுள்ளது.

கரோனா அச்சம் முற்றாக விலகி வணிக நிறுவனங்களும், கல்விக்கூடங்களும் தங்கள் ஸ்தாபனங்களை விளம்பரம் செய்ய முன்வரும்போதும், பொதுநிகழ்ச்சிகள் அதிகளவு நடக்க ஆரம்பிக்கும் போதும் மட்டுமே இவர்களது தொழில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நாகர்கோவிலில் உள்ள விளம்பர நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மினேஷ் ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசுகையில், “முக்கியமான சீசன் நேரத்தில் பொது முடக்கம் ஏற்பட்டுவிட்டதால் முற்றாகத் தொழிலை இழந்துவிட்டோம். ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் அதன் ஸ்பான்ஸர்கள் ஏரியாக்களில் செய்து வந்த ஆட்டோ விளம்பரமும் ரத்தானது. சுமையுந்து ஆட்டோவில் விளம்பரப் பலகை வைத்து போட்டிகளை விளம்பரம் செய்வோம். தமிழகம் முழுவதிலும் இதில் மட்டுமே 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும்.

இதுபோக, கோடைகாலத்தில் ஃபர்னிச்சர், ஹோம்லிங்க்ஸ் பொருள்களின் விற்பனையகங்கள் விளம்பரப் பலகைகளும் விளம்பர வாகனங்களும் கேட்பார்கள். அவர்களே கடை திறக்காமல் தொழில்வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் அவர்களைச் சார்ந்திருக்கும் எங்கள் நிலையைக் கேட்கவும் வேண்டுமா?

இதேபோல், பெரிய பெரிய கம்பெனிகள் நகர்ப்புறங்களின் அடுக்கு மாடிகளில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப் பலகையாக வைத்துக் கேட்பார்கள். ஆனால், விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு பொது முடக்கத்தில் அரசு அனுமதிக்க வில்லை. அதனால் இந்தத் தொழிலும் செய்ய முடியாது.

வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரைச் சுவர் விளம்பரம் செய்யவும் எங்களை அணுகுவார்கள். அப்படி சுவர் விளம்பரங்கள் எழுதவும் அரசு அனுமதிக்கவில்லை. கரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் மத்திய - மாநில அரசுகளின் முயற்சிகள் நம்பிக்கை தருகின்றன. அதேநேரம் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் மக்கள் அதிலிருந்து மீளவேண்டும். அவர்களின் வாழ்வு இயல்புநிலைக்குத் திரும்புவதன் மூலம் வணிகம் செழிக்க வேண்டும்.

கிரிக்கெட் போட்டிகள், கேளிக்கை நிகழ்ச்சிகளை ரசிக்கும் மனநிலைக்கு மக்கள் திரும்ப வேண்டும். அதன் பின்னரே அதிகளவு நிகழ்ச்சிகள் நடக்கும். இதெல்லாம் இயல்பாக நடக்க வேண்டுமானால் கரோனா அச்சம் நீங்க வேண்டும். அப்படி நீங்கிய பிறகுதான் எங்கள் தொழிலும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால் அந்த நாள் சீக்கிரமே வரவேண்டும் என பிரார்த்தித்துக் காத்திருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x