

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ இடங்களில் துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எரிக்க முயன்றனர்.
புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாசாலை- காமராஜர் சாலை சந்திப்பில் இன்று (மே 29) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் 5 பேர் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எடுத்து வந்து எரிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரியக்கடை போலீஸார் அந்த உருவ பொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் சாலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரிடம் இருந்து பொம்மையை பறித்தனர்.
தந்தை பெரியார் தி.க புதுச்சேரி மாநிலத் தலைவர் வீரமோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் தொடர்பாக துணைத்தலைவர் இளங்கோ கூறுகையில், "கடந்த 3 ஆண்டுகளில் ஓபிசி, எம்பிசி மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் உயர் சாதியினருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
ஓபிசி, எம்பிசி மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது. ஓபிசி, எம்பிசி மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழு அறிக்கையை ஒழித்துக் கட்டவே முயற்சி நடக்கிறது. அதை கண்டித்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்று தெரிவித்தார்.