Published : 29 May 2020 10:11 AM
Last Updated : 29 May 2020 10:11 AM

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு: நீர்நிலைகளை வேகமாக தூர்வார வேண்டும்; வாசன் வேண்டுகோள்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழத்தில் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட இருப்பதால் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை வேகப்படுத்தி, முறையாக தூர்வார தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 29) வெளியிட்ட அறிக்கை:

"ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பே நீர்நிலைகள் பாதுகாப்பான நிலையில் இருந்தால் தான் வருகின்ற நீரானது பாய்ந்து செல்லவும், தேக்கி வைக்கவும், வேளாண் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தவும் ஏதுவாக இருக்கும்.

குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையின் நீரானது ஆதாரமாக இருக்கின்ற காரணத்தால் தண்ணீர் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அப்போது தான் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட இருக்கின்ற நீரானது விவசாயத்திற்கு பயன் தந்து சாகுபடி நல்ல முறையில் நடைபெற்று மகசூலும் அதிக அளவில் கிடைக்கும்.

எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் முறையாக முழுமையாக தூர்வாரிட ஏற்கெனவே தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இன்னும் விரைவுப்படுத்தி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அப்போது தான் மேட்டூர் அணையின் நீரானது வீணாகாமல் ஆறு, ஏரி, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் மூலம் கடைமடைப்பகுதி வரை சென்று விவசாயத்திற்கு பயன்படும். அதாவது, கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்பதால் விவசாயிகளும் குறுவை சாகுபடி செய்ய மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள்.

மேலும், இந்த வருடம் சுமார் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்ற இவ்வேளையில் தண்ணீர் முறையாக, முழுமையாக கிடைத்தால் தான் விளைச்சலும், மகசூலும் நன்கு பலன் தரும்.

இதன் மூலம், கடந்த காலங்களில் விவசாயிகள் விவசாயத்தொழிலால் அடைந்த பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து ஓரளவுக்கு மீள முடியும். அது மட்டுமல்ல, இப்போதைய கரோனா காலத்தில் விவசாயத்தொழிலும் பாதிக்கப்பட்டிருப்பதால் உரித்த காலத்தில் திறக்கப்பட இருக்கின்ற மேட்டூர் தண்ணீர் கிடைத்தால் தான் விவசாயிகள் மகிழ்ச்சியோடு விவசாயம் செய்வார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு 67 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது முழுமையாகப் பயனளிக்க வேண்டும்.

எனவே, தமிழக விவசாயிகளுக்கு இப்போதைக்கு மிக முக்கிய தேவையாக இருப்பது மேட்டூர் அணையின் நீர் என்பதால் நீர்நிலைகளை முறையாக, விரைவாக தூர்வாரி தண்ணீர் குறுவை சாகுபடி செய்ய இருக்கும் டெல்டா மாவட்டப் பகுதி முழுமைக்கும் சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x