Published : 29 May 2020 09:49 AM
Last Updated : 29 May 2020 09:49 AM

நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்: பயிர்ப்பாதுகாப்பு பணிக்காக ரூ.54.46 லட்சம் நிதி ஒதுக்கீடு; முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால், பயிர்ப்பாதுகாப்பு பணிக்காக ரூ.54.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 29) வெளியிட்ட அறிக்கை:

"வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தி, மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது, நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதற்கு பயிர்ப் பாதுகாப்புப் பணிகளுக்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து நான் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் எக்டர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளியில், புதிய இன மாவுப்பூச்சியின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பாதிப்பினை ஏற்படுத்திய இப்பூச்சியானது, நடவுக் குச்சிகள் வாயிலாக பரவி வருகிறது. தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக மாவுப்பூச்சியின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது.

இதன் தாக்குதல் விபரம் தெரிந்தவுடனேயே, பாதிக்கப்பட்ட வயல்களுக்கு சென்று இம்மாவுப்பூச்சியின் தாக்குதலைக் கணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கும் நான் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவின் பேரில், தோட்டக்கலை விரிவாக்கப் பணியாளர்கள் 27.5.2020 அன்று வரை மேற்கொண்ட கள ஆய்வுகளின்படி, நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 3,112 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரில் இம்மாவுப்பூச்சியின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பூச்சி, மரவள்ளிப் பயிரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சாற்றை உறிஞ்சுவதால், நுனிக்குருத்துகள் உருமாறி, வளர்ச்சி குன்றி விடும். மேலும் நுனியிலுள்ள இலைகள் ஒன்றாக இணைந்து முடிக்கொத்தாக தோற்றமளிக்கும். இதனால், கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும்.

இப்பாதிப்பினைக் குறைப்பதற்கு, கீழ்க்காணும் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என நான் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

1. பாதிப்பைக் குறைப்பதற்கு, போதிய அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.

2. தாக்குதலானது மரவள்ளி பயிரின் நுனிக்குருத்து பகுதியில் அதிகமாக இருப்பதால் நுனிக்குருத்தை பறித்து எரித்து பூச்சிகளை பெருவாரியாக கட்டுப்படுத்த வேண்டும்.

3. பிற மாவட்டம் அல்லது மாநிலத்திலிருந்து நடவுப் பொருட்களை வாங்கி வந்தால், நடவின்போது, குளோர்பைரிபாஸ் மருந்து கரைசலில் 10 நிமிடம் நடவுக் கரணைகளை நனைத்து நடவு செய்ய வேண்டும்.

4. ஒரே மருந்தினையோ அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மருந்துகளின் கரைசல்களையோ தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.

5. பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து நடவுப் பொருட்களை தேர்வு செய்யக் கூடாது.

மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை விவசாயிகளுக்கு நேரடியாகவும், செய்தி வாயிலாகவும், கிராம அளவிலான விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும் எனவும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மரவள்ளியில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக, நடவு முடிந்த இரண்டாவது மாதத்தில் அசாடிராக்டின் மருந்தினையும், இரண்டாம் முறையாக, புரோபினோபாஸ் அல்லது தயோமீதாக்சேம் மருந்தினையும் தெளிப்பதற்காக, ஹெக்டேருக்கு 1,750 ரூபாய் வீதம் 3,112 ஹெக்டேரில் பயிர்ப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதியினை வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x