

நல வாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்துவோருக்கு ரூ.2,000நிவாரண நிதி வழங்க வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நலவாரியங்களில் பதிவு செய்யாத முடிதிருத்துவோருக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, இத்தொகையை வழங்குவதற்கான வழிமுறைகளை வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர்அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பதிவு செய்யாத முடிதிருத்துவோருக்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ.2,000 நிவாரணத் தொகையை வழங்குவதற்கான விரிவான வழிமுறைகளை தொழிலாளர் நலத் துறைச் செயலர் வெளியிட்டுள்ளார். அதன்படி,சென்னையில் வருவாய் ஆய்வாளரும், இதர மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்களும் பதிவு செய்யாத முடிதிருத்துபவர்களைக் கண்டறிய வேண்டும். அதன்பின், அவர்கள் முடிதிருத்தும் பணியாளர்கள் என்பதற்கான உண்மை நிலையை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து வங்கி கணக்கு விவரங்கள், கைபேசி எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து, விரைவாக தொழிலாளர் துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் சலூன் கடைகள்...
இதற்கிடையே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் சலூன் கடைகளைத் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம்சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘சென்னையில் சலூன் கடைகள் திறப்பது குறித்து களஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கடைகள் திறக்கப்படும்’’ என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.