Published : 28 May 2020 10:07 PM
Last Updated : 28 May 2020 10:07 PM

மதுரையில் நீண்ட காலத்திற்குப் பிறகு கொட்டித்தீர்த்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்- மரங்கள் முறிந்து விழுந்ததால் இருளில் மூழ்கிய குடியிருப்புகள்

மதுரை மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு இடி, மின்னலுடன் தொடர்ந்து 4 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் சிற்றாறுகள் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது. கனமழையில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால் மாவட்டம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பெரியாறு அணையையும், வைகை அணையையும் நம்பியே உள்ளது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமைழை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெய்தாலும், மதுரையை பெரியளவிற்கு பெய்வதில்லை.

அதனால், மதுரை மாவட்டம் மழைமறைவு பிரதேசமாகவே உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் பரவலாகவே ஆயிரம் அடிக்கு மேல் சென்றுவிட்டது. கண்மாய், வைகை ஆறு நீரோட்டமுள்ள பகுதிகளில் மட்டுமே ஒரளவு நிலத்தடி நீர் மட்டம் இருக்கிறது.

தற்போது கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மதுரையில் அதிகமாக உள்ளது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவு புழுக்கமும் மக்களை வாட்டி வதைக்கிறது. கோடை மழை சிறியளவில் கூட பெய்யாததால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ஃபேன் போட்டாலும் புழுக்கத்தால்
நெளிந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை மழை 3.30 மணி முதல் கன மழை பெய்ய ஆரம்பித்தது. இடி, மின்னலுடன் இரவு 7.30 மணி வரை நிற்காமல் கன மழை பெய்தது.

சாலைகளில், குடியிருப்பு தெருக்களில் மழைநீர் சிற்றாறுகள் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது. பலமான சூறை காற்றும் அடித்ததால் சாலைகயோர மரங்கள் அனைத்தும் வழிநெடுக முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாயந்து விழுந்ததால் மாலை 3.30 மணி முதல் மின்தடை ஏற்பட்டது.

சாலைகளில் வாகனங்களில் கூட செல்ல முடியாத தண்ணீர் முட்டிற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மின்தடையால் குடியிருப்புகள் இருளில் மூழ்கியது. மின்வாரிய ஊழியர்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பெரிய மரங்கள் விழுந்ததால் அதை அகற்றி போக்குவரத்தை மட்டுமே இரவிற்குள் சீர் செய்ய முடியும். அதன்பிறகு மழை பெய்தால் மீண்டும் மரங்கள் முறிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது.

மதுரை நகர்பகுதிகள் கூட பெரும்பாலான குடியிருப்புகளில் இரவு 7.30 மணிவரை மின்சாரம் வரவில்லை. கிராமங்களில் சுத்தமாக மின்சாரமே இல்லை. இன்று இரண்டாவது ப்ளஸ்-டூ விடைத்தாள் திருத்தம் பணி நடந்தது. மழை பெய்யத்தொடங்கியதுமே 3.30 மணியளவில் மதுரை நகர்பகுதிகளில் மின்சாரம் இல்லை. அதனால், விடைத்தாள் திருத்தம் பள்ளிகளிலும் மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர்கள் இயக்கப்படாததால் விணாத்தாள் திருத்தம் மையங்கள் இருளில் மூழ்கின. அதனால், ஆசிரியர்கள் செல்ஃபோன் டார்ச் லைட் வெளிச்சத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தம் பணி மாலை 4.30 மணிக்கு முடிந்தது. ஆனால், பள்ளிகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்காக ஏற்பாடு செய்த பஸ்கள் அந்தந்த பஸ் நிறுத்தங்களில் ஆசிரியர்கள் வருகையை கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டன.

தற்போது ஆட்டோக்கள் பெரியளவில் இயக்கப்படவில்லை. பொதுப் பேருந்து போக்குவரத்தும் இல்லை. அதனால், பெண் ஆசிரியர்கள், விடைத்தாள் மையங்களில் இருந்து வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். அதன்பிறகு 6 மணிக்கு மேல் அவரவர்கள் குழுவாக ஆட்டோக்களை ஏற்பாடு செய்து கொட்டும் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்குத் திரும்பினர்.

மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு மின்சாரம் விநியோகத்தை வழங்க மின்வாரிய உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இன்று பெய்த இந்த மழை ஒரளவு வெயிலின் சூட்டை குறைத்துள்ளது. ஆனால், நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கு பெரியளவில் வாய்ப்பு இல்லை. தொடர்ந்து இதுபோல் சில நாட்கள் இந்த கோடை மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்து குடிநீர் பற்றாக்குறை தீரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x