Published : 28 May 2020 08:25 PM
Last Updated : 28 May 2020 08:25 PM

மீட்டெடுக்கப்படும் நொய்யல் ஆறு! ரூ.230 கோடியில் புனரமைப்பு திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.காசிலிங்கம், விவசாயி தீத்திப்பாளையம் பெரியசாமி உள்ளிட்டோர்.

கோவை

ரூ.230 கோடியில் நொய்யல் ஆற்றை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணியை தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் கு.ராசாமணி, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.காசிலிங்கம், செயற்பொறியாளர் ஜெ.ராஜேந்திரன், விவசாயி தீத்திப்பாளையம் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, "கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் நொய்யல் ஆற்றில் ஆரம்பம் முதல் 158.35 கிலோ மீட்டர் வரை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் ரூ.230 கோடியில் நடைபெற உள்ளன.

இது, நொய்யல் ஆற்றுப்பாசனத்தை மட்டுமே சார்ந்து விவசாயம் மேற்கொள்ளும் கோவை மாவட்ட விவசாயிகளுக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. பழைய நொய்யலை மீட்டெடுக்கவும், இயற்கை ஆர்வலர்கள், விவசாய அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் சாக்கடைக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பது தவிர்க்கப்பட்டு, விவசாயத்துக்கு ஏற்ற நீராகப் பயன்படுத்தப்படுகிறது. நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைக் கட்டமைப்புகளை சீரமைக்கும்பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகமாகி, பழைய நொய்யல் நதி மீண்டும் உயிர் பெறும். இத்திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 100 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெறும்" என்றார்.

விவசாயி தீத்திப்பாளையம் பெரியசாமி கூறும்போது, "காஞ்சிமா நதி என்றழைக்கப்பட்ட நொய்யல் ஆற்றைச் சீரமைக்க நிதி ஒதுக்கி, பணிகளை உடனடியாகத் தொடங்கியமைக்காக தமிழக அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.

குறிப்பாக, கோவை மாவட்டத்தின் அடையாளமான நொய்யலின் பழமையை மீட்டெடுத்து, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக விவசாயிகளின் காவலனாகத் திகழும் முதல்வருக்கும், கோவை மாவட்ட மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் விவசாயிகள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

நொய்யல் ஆற்றுப் பாசனத்தில் 23 அணைகள், 32 குளங்கள் உள்ளன. அவற்றில் கோவை மாவட்டத்தில் 18 அணைகள், 22 குளங்களைத் தூர்வாரி சீரமைத்தல், வாய்க்கால்கள், மதகுகள், புதிய தடுப்பணைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயரும். 20 அடி ஆழம் கொண்ட சித்திரைச்சாவடி தடுப்பணையைத் தூர்வாரும்போது அதிக அளவில் தண்ணீரைச் சேமிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இதனால், தடுப்பணையைச் சுற்றியுள்ள விவசாயிகள் பெரிதும் பயனடைவர்.

மேலும், தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்கும்போது தடையின்றி தண்ணீர் செல்வதுடன், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதும் தடுக்கப்படும். இந்தத் திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 36 ஆயிரத்து 304 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x