

காரைக்கால் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று மாலை ரயில் மூலம் தங்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பலர் தனியாக பல்வேறு வியாபாரங்களிலும் ஈடுபட்டு வந்தனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் அவர்கள் வேலையின்றித் தவித்து வந்தனர். மேலும் தாங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், முதல் கட்டமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 355 பேர் காரைக்காலிலிருந்து சிறப்பு ரயில் மூலம் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு கடந்த 16-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரண்டாவது கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 19 பேர் கடந்த 18-ம் தேதி புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சென்னையிலிருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூன்றாம் கட்டமாக கடந்த 22-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 17 தொழிலாளர்கள் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சியிலிருந்து ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நான்காவது கட்டமாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 186 பேர் காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து இன்று (மே 28) மாலை 6 மணியளவில் சிறப்பு ரயில் மூலம் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் திருச்சியில் இருந்து பேருந்து மூலம் அழைத்து வரப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 289 தொழிலாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
காரைக்கால் ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி, கொடியசைத்து ரயிலை அனுப்பி வைத்தனர். இந்த ரயில் புதுச்சேரி வழியாக ஒடிசா செல்கிறது. தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.