

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பலதரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், வில்லிசைக் கலைஞர்கள், நாதஸ்வரம், மேளக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் திருவிழாக்கள் நடைபெறாததாலும் சுப நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடைபெறுவதாலும் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கரோனா நிவாரண நிதி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான கலைஞர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று திரண்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையில் கோரிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.