ஓசூர் அருகே ரூ.1.34 கோடி மதிப்பில் 33 குட்டைகள் தூர் வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஓசூர் அருகே ரூ.1.34 கோடி மதிப்பில் 33 குட்டைகள் தூர் வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 34 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள 33 குட்டைகள் தூர் வாரி சீரமைக்கும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குட்டைகளில் தூர் வாரி சீரமைக்கும் பணிகளை மழைக்காலம் தொடங்கும் முன்னே விரைவாக முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கெலமங்கலம் ஒன்றியத்தில் ரூ.15 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பசுமை வீடுகளின் கட்டுமானப் பணிகள் மற்றும் பள்ளி சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''தமிழக முதல்வர் உத்தரவின்படி மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2019-20 நிதியாண்டில் 33 குட்டைகள் தூர் வாரிப் புனரமைக்கும் பணிகள் ரூ.1 கோடியே 34 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி ராயக்கோட்டை ஊராட்சி காமநாயக்கம் குட்டை - ரூ.5.35 லட்சம், பூடம்பட்டி குட்டை - ரூ.2.61 லட்சம், ஈச்சம்பட்டி குட்டை - ரூ.4.73 லட்சம், தொட்ட திம்மனஹள்ளி ஊராட்சி குப்பன் குட்டை - ரூ.2.68 லட்சம், போல்பாறை குட்டை - ரூ.5.58 லட்சம், திம்ஜிப்பள்ளி ஊராட்சி சின்னகுட்டை - ரூ.6.35 லட்சம், காடை குட்டை - ரூ.2.25 லட்சம், பெட்டமுகிலாளம் ஊராட்சி தொலுவபெட்டா குட்டை - ரூ.4.93 லட்சம், போடிச்சிப்பள்ளி ஊராட்சி கோவில் குட்டை - ரூ.1.98 லட்சம் உட்பட 33 குட்டைகள் ஆகியவற்றில் மாநில நிதிக்குழு மானிய நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறினார்.

இந்த ஆய்வுப் பணிகளின்போது கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, ஸ்ரீதர், உதவிப் பொறியாளர்கள் தமிழ், வெங்கடேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in