Published : 28 May 2020 05:45 PM
Last Updated : 28 May 2020 05:45 PM

அரசு செய்ய வேண்டியதை திமுக செய்ததால் ஸ்டாலின்  மீது பாய்கிறார் அமைச்சர் காமராஜ்: டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்

தமிழக மக்களின் நலனுக்காக திமுக எடுக்கும் முயற்சிகளைக் கேலி செய்வதும் அதுகுறித்து தவறாக விமர்சனம் செய்வதும் இந்த அரசாங்கத்திற்கு வாடிக்கையாகி விட்டது. அரசைப் பொறுப்போடு நடவடிக்கை எடுக்கச் சொன்னால் பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று விமர்சிப்பதா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொல்வதை மறுப்பது வேண்டுமானால் பொறுப்பற்றதனமாக இருக்கலாம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொல்வது எப்படி பொறுப்பற்ற தன்மை ஆகும் என டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு உணவுத்தேவையை நிறைவேற்றிவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறார் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டினார்.

திமுகவை விமர்சித்து அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“மக்களுக்கான நிவாரணப் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். பல்வேறு தரப்பு மக்கள் உணவின்றி வாடும்போது ஒன்றிணைவோம் வா திட்டத்தைக் கொடுத்து அதற்கு ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து அதில் உதவி கேட்டு அழையுங்கள் என்று தலைவர் அறிவித்தார்.

பின்னர் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் இவ்வாறு அறிவிக்கப்பட்ட ஹெல்ப்லைன் எண் மூலம் 16 லட்சம் பேர் உதவி கேட்டு அவர்களுக்கு உதவி செய்ததாக அறிவித்தார். இது அந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசியவர்களுக்கு செய்த உதவி. இதுவல்லாமல் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் அவரவர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அழைக்காமலேயே ஏராளமான உதவிகளைச் செய்துள்ளனர்.

இதைத் தாண்டி அரசு செய்யவேண்டிய உதவி என்கிற நிலையில் 1 லட்சம் மனுக்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தலைமைச் செயலரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தொற்றுக் காலத்தில் மக்கள் அடையும் இன்னலைத் தீர்க்க, அவர்கள் உண்வுத் தேவையைத் தீர்க்க திமுக எடுத்த முயற்சி.

இந்த நடவடிக்கைகளைப் பாராட்டக்கூட வேண்டாம், இந்தப் பெருமை எல்லாம் திமுகவுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது என்று அமைச்சர் காமராஜ் முயல்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால் ஒரு லட்சம் மனுக்களை திமுக கொடுக்கவில்லை 98,000 மனுக்கள் என்கிறார். அதில் ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை.

அவர் மேலும் என்ன செய்கிறார் என்றால் சிலரை அழைத்து ஹெல்ப்லைன் எண்ணுக்கு நாங்கள் அழைக்கவே இல்லை எனச் சொல்ல வைக்கிறார். இக்கட்டான நிலையில் அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது. மனுக்கள் மூலம் அரசாங்கத்திற்கு மக்களின் நிலையைத் தெரிவிக்க திமுக முயல்கிறது என்பதை ஒரு நல்ல அரசு என்றால் வரவேற்க வேண்டும். ஆனால் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

மார்ச் 24-ம் தேதி தொடங்கியது ஊரடங்கு. ஆனால் இந்த அரசு இன்றைக்கு வெளியிடும் செய்திக்குறிப்பைப் பார்த்தால் நோய் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. காரணம் என்னவென்றால் முதல் ஒரு மாதம் இவர்கள் எதுவும் செய்யவில்லை. இப்போதுதான் மேற்கொள்கிறார்கள். இவர்கள் ஆய்வு கூடக்கூட நோய் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது. இப்போதாவது இதைச் செய்கிறார்களே என்று எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

16 லட்சம் பேருக்கு ஒன்றிணைவோம் மூலம் செய்த உதவியை அவதிப்படும் மக்களுக்கு செய்யும் உதவியாகப் பார்க்கிறோம். இதில் அரசு எங்களைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. குறை சொல்லும் நோக்கத்தோடு உணவு அமைச்சர் காமராஜ் பேட்டி அளிக்கிறார். அனைத்தையும் மக்களுக்குக் கொடுத்துவிட்டோம் என்கிறார். அனைத்தும் கொடுத்தீர்கள் என்றால் ஒரு லட்சம் பேர் ஏன் மனு அளிக்கப் போகிறார்கள்.

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் நோக்கமே கட்சி உறுப்பினர்கள் இணைந்து மக்களுக்கு உதவி செய்வதுதான். இது ஊரடங்கிற்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஊரடங்கு நேரத்தில் ஊரடங்குக்குள் ஊரடங்கு என 4 நாட்களை அறிவித்ததால் அதற்கு ஒரு நாள் முன்னர் கோயம்பேடு சந்தையில் வழக்காமாக 80 ஆயிரம் பேர் வரும் சந்தையில் ஏறத்தாழ 2.5 லட்சம் பேர் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவைப் பொறுத்தவரையில் இதில் அரசியல் செய்யும் நோக்கம் அல்ல. பட்டினியால் மக்கள் வாடக்கூடாது. கரோனாவால் இறப்பவர்களை விட பட்டினிச் சாவால் மக்கள் இறந்து போகக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. மக்கள் வேலையின்றி இருக்கிறார்கள். தமிழகத்தில் 60 முதல் 75 லட்சம் பேர் வேலையின்றி இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தைச் சேர்த்தால் ஏறத்தாழ 2 கோடி பேர் வருவார்கள்.

அவர்களுக்கு மனம் உவந்து உதவ வேண்டும் என்பதில் ஒரு திட்டத்தை அறிவித்து அவர்களுக்கு அரசாங்கம் செய்யாத காரணத்தால் எங்களை அணுகிய அடிப்படையில் உதவி அளித்தோம். அரசாங்கம் செய்ய வேண்டியதை திமுக செய்தது. தொடக்கம் முதல் இந்த நோயைப் பயன்படுத்தி அரசியல் செய்வது ஆளுங்கட்சி. திமுக அதைச் செய்யவில்லை. குறைகளைச் சுட்டிக்காட்டினால் தவறு என்று சொல்வது சரியல்ல. அதுதான் எதிர்க்கட்சியின் வேலை.

திமுகவைக் குறை சொல்ல வேண்டும் என்கிற ஒற்றைக் காரணத்தோடு அமைச்சர் காமராஜ் பொய்ப் புகாரைக் கூறுகிறார். எல்லாவற்றிலும் அரசியல் பார்க்கிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் என்றால் நீங்கள் என்ன டாக்டர்களா? உங்களிடம் ஆலோசனை கேட்க என்கிறார் முதல்வர். அனைத்துக் கட்சிக் கூட்டம் மருந்து தயாரிக்க அல்ல.

முழு அடைப்பினால் பசி, பட்டினி வந்துவிடக்கூடாது. அதற்கு யோசனை சொல்லக் கேட்டோம். மத்திய அரசிடம் நிதியைக் கேட்கச்சொன்னால் நீங்கள் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்களே என்கிறார். இவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் கூட தெரியவில்லை. மாநில அரசுக்கான நிதியைக் கேட்டுப்பெறுவது நமது உரிமை. அதைக் கேட்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் தள்ளி விடுகிறார்.

அரசாங்கத்திடம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதற்கு சிறுபிள்ளைத்தனமாக பதிலைச் சொல்வது இந்த அரசுக்கு வாடிக்கையாக போய்விட்டது. மக்களின் பிரச்சினை அறிந்து திமுக தலைவர் முதல் உத்தரவாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவச் சொன்னார். ஏனென்றால் அவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். அவர் அதை உணர்ந்திருந்தார். அரசு அதை உணரவில்லை.

தமிழக மக்களின் நலனுக்காக திமுக எடுக்கும் முயற்சிகளைக் கேலி செய்வதும் அதுகுறித்து தவறாக விமர்சனம் செய்வதும் இந்த அரசாங்கத்திற்கு வாடிக்கையாகிவிட்டது. அரசுக்கு பொறுப்போடு நடவடிக்கை எடுக்கச்சொன்னால் பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று விமர்சிப்பதா? பொறுப்போடு செயல்படும் எதிர்க்கட்சித் தலைவர் பலமுறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியுள்ளார்.

இது மக்களின் உயிர் பிரச்சினை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொல்வதை மறுப்பது வேண்டுமானால் பொறுப்பற்றதனமாக இருக்கலாம், கூட்டச் சொல்வது எப்படி பொறுப்பற்ற தன்மை ஆகும்”.

இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x