

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
கடந்த 3-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் 15 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோர் இன்று புழல் சிறைக்கு சென்று மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ, ‘‘பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவதுடன், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’’ என்றார். இதே கருத்தை திருமாவளவனும் தெரிவித்தார்.
தமிழிசை சவுந்திராஜன் கூறும்போது, ‘‘மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை மதிக்கிறோம், பாராட்டுகிறோம். அதே நேரத்தில் தங்களது படிப்புக்கே அவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். வன்முறையின் மூலம் எதுவும் சாதிக்க முடியாது. எனவே, அறவழியில் போராட வேண்டும்’’ என்றார்.