

திருவிழாக் காலங்களில் ராஜா வேடமும், கடவுள் வேடமும் போடாத நாள் இல்லை. மேடையிலோ வரம் தரும் வேடங்களைப் போடும் தெருக்கூத்துக் கலைஞர்கள், கரோனாவால் வாழ்விழந்து நிஜத்திலோ உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.
கலைகள் நிறைந்த இடம் புதுச்சேரி. அதிலும் பழங்காலத் தெருக்கூத்துக் கலைஞர்கள் புதுச்சேரி கிராமப் பகுதிகளான கோனேரிக்குப்பம், திருக்கனூர், வில்லியனூர், கூடப்பாக்கம், மதகடிப்பட்டு பகுதிகளில் ஏராளமாக வசிக்கின்றனர். இவர்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் திருவிழாக்களில் நாடகங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
குறிப்பாக, திரவுபதி, அர்ஜூனன் தபசு, கிருஷ்ணன் தூது, நளாயினி சரித்திரம், சுபத்ரை, வள்ளித் திருமணம், சூரபத்ர வதை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடகங்களை, விநாயகர், திரவுபதி, அங்காளபரமேஸ்வரி மற்றும் முருகன் கோயில் திருவிழாக்களில் நிகழ்த்துவது வழக்கம். அவர்களின் நாடகங்களுக்குத் தனி மவுசு உண்டு. ஆனால், இவர்கள் வாழ்வையும் கரோனா முற்றிலும் புரட்டிப்போட்டு விட்டது.
தங்கள் வாழ்வுநிலைச் சீரழிவை கதை சொல்வது போலவே நம்மிடம் இயல்பாகப் பேசுகிறார்கள், தெருக்கூத்து கலைஞர்கள்.
"சித்திரை முதல் ஆவணி வரை ஐந்து மாதங்கள் கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் களை கட்டும். இதில் கிடைக்கும் தொகையை வைத்துதான் மீதியுள்ள ஏழு மாதங்களில் வாழ்வை நடத்துவோம். இது சீசன் டைம். ஆனால், கரோனாவால் வாழ்வே பறிபோய்விட்டது.
அடுத்த ஓராண்டுக்கு எப்படி வாழ்வை நடத்துவது என்றே தெரியவில்லை. தமிழகத்தில் நலவாரியம் உண்டு. புதுச்சேரியில் எங்களுக்கு நலவாரியமும் இல்லை. சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தரும் அரிசியை வைத்துதான் வாழ்வை நகர்த்துகிறோம். அதுவும் தீர்ந்துவிட்டால் பட்டினிதான்" என்கின்றனர்.
தெருக்கூத்துக் கலைஞர்கள் குழுக்களாக இயங்குகின்றனர். இக்குழுக்களின் தலைவராக இருப்போர் தரப்பில் கூறுகையில், "மொத்தம் 20 குழுக்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் வரை இருப்பார்கள். குழுக்களின் தலைவராக இருக்கும் நாங்கள் குழுவில் இருப்போருக்கு முன்பணம் தருவோம். குறிப்பாக பெண் வேடம், அரக்கர் வேடம் என பலருக்கும் தர பல லட்சம் கடனுக்கு வாங்கித் தந்து பதிவு செய்து வைப்போம்.
இம்முறை விழாக்களே நடக்காததால் வட்டிக்கும் பணம் கட்ட முடியவில்லை. தந்த பணத்தையும் வாங்க முடியவில்லை. எங்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. முக்கியமாக கலை மீது ஆர்வம் இருக்கிறது. அதனால்தான் வட்டிக்கு வாங்கியோ, நகையை அடகுவைத்தோ நிகழ்வை நடத்துகிறோம். கரோனாவால் இக்கலை நிலை என்னவாகும்... யாராவது தொடர முடியுமா என்ற கேள்விதான் இப்போது மனதில் இருக்கிறது" என்கிறார்.
பெண் வேடம் கட்டுவோர் கூறுகையில், "எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. நிலையாக வேலையில் இருக்க மாட்டோம் என வேறு வேலைகளிலும் எங்களைச் சேர்ப்பதில்லை. இதை நம்பிதான் வாழ்க்கை. குடும்பம் நடக்கிறது.
உண்மையில் கரோனாவால் உணவுக்கே வழியில்லை. கிடைத்த அரிசியை வைத்து ஒருவேளைதான் சாப்பிடுகிறோம். யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். முக்கியமாக நாங்கள் வாங்கும் ஊதியத்தில் ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக், ஆர்மோனியப் பெட்டி எல்லாமே சரி செய்யவே ஐம்பது சதவீதத்துக்கு மேல் சரியாகிவிடும். விழாக் காலத்தில் கரோனா வந்ததால் இந்த முறை கூத்தும் நடக்கவில்லை. இனி வாழ்க்கை என்னவாகும் எனத் தெரியவில்லை" என்கின்றனர்.
இவர்களுடன் கும்மி பாட்டு பாடுவோரும் இருக்கின்றனர். அவர்கள் கோயில் திருவிழாக்களில் சாமி வரலாறு, ஊர் வரலாறு பெருமைகளை கும்மிப் பாட்டுகளாகப் பாடுவது வழக்கம். அவர்களிடம் கேட்டால் தங்கள் வாழ்வை கும்மி ப்பாட்டாகவே கண்ணீர் விட்டபடி பாடுகின்றனர்,
"யாருக்கும் வேலையில்லை. சாப்பாடு இல்லாமல் இருக்கோம். பள்ளி திறந்தால் எப்படி ஸ்கூல் பீஸ் கட்டுவது எனத் தெரியவில்லை. கழுத்தில் இருக்கும் செயின், நகை அடமானம் வைத்துதான் ஓட்டுறோம். எப்படி செய்வது என தெரியவில்லை" என்று வேதனையைப் பகிர்கின்றனர்.
தெருக்கூத்தில் கலைஞர்கள் ராஜா, தேவேந்திரன் என கடவுள் கதையச் சொல்லியபடி வலம் வரும் இவர்களின் மறுபக்கமோ வறுமையில் சிக்கித் தவிக்கிறது. அடுத்தவர்களை மகிழ்விக்கும் இக்கலைஞர்கள் உணவுக்கு வழியின்றி அடுத்தவர் கைகளை எதிர்பார்க்கும் சூழலிலிருந்து காக்குமா அரசு?