

சேலத்தில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் காந்தியவாதி சசிபெருமாள் உருவப் படத்துக்கு கள் வைத்துப் படைத்து அஞ்சலி செலுத்தினர்.
பூரண மதுவிலக்கு வேண்டி போராடி மறைந்த சசிபெருமாளின் உருவப் படத்துக்கு சேலத்தில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து கள் உள்ளிட்ட பானங்களை வைத்து படையலிட்டு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நல்லசாமி கூறியதாவது:
சசிபெருமாள் ஆரம்ப காலத்தில் கள்ளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். காலப்போக்கில் கள் போதைப்பொருள் அல்ல என்பதை அறிந்து, எங்களோடு கள் தடையை நீக்கக் கோரிய போராட்டங்களில் பங்கேற்றார்.
எங்களோடு போராட்டக் களத்தில் இருந்தவர் என்பதற்காகத்தான் நாங்கள் அவருடைய உருவப் படத்துக்கு கள் படைத்து அஞ்சலி செலுத்தினோம். சசிபெருமாளின் மகன் விவேக் இது தனது தந்தை பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும், எங்கள் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
அவதூறு வழக்கு தொடுப்பதாக வாய் பேச்சோடு நில்லாமல், வழக்கு தொடர வேண்டும். அப்போது தான் கள் உணவின் ஒரு பகுதி என்பது உள்ளிட்ட சில உண்மைகள் வெளிவரும்.
தமிழக அரசு கள் மீதான தடையை நீக்க வேண்டும். இல்லையெனில், வரும் 2016-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.