Published : 28 May 2020 12:27 PM
Last Updated : 28 May 2020 12:27 PM

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் பல மனுக்கள் போலியானவை; ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்; அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் - அமைச்சர் காமராஜ்: கோப்புப்படம்

அரசு உணவுத்தேவையை நிறைவேற்றிவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறார் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 28) அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

" 'ஒன்றிணைவோம் வா' என்கிற திட்டத்தின் மூலம் அரசாங்கம் செயல்படவில்லை என திமுக விமர்சிக்கிறது. 13.05.2020 அன்று டி.ஆர்.பாலு தலைமைச் செயலகத்திற்கு வந்து தலைமைச் செயலாளரைச் சந்தித்து மனுக்கள் அளித்தார். ஆனால், அதன் பின்னர் தலைமைச் செயலாளரைக் குற்றம்சாட்டி ஒரு பேட்டியை டி.ஆர்.பாலு தந்தார். அதற்கு தலைமைச் செயலாளர் விளக்கமாக பதிலளித்து விட்டார். அதற்குள் நான் போக விரும்பவில்லை.

ஏப்ரல் 20-ல் ஆரம்பித்து மே 13 வரை 15 லட்சம் மனுக்கள் திமுகவுக்கு வந்துவிட்டன என்றார் டி.ஆர்.பாலு. 'ஒன்றிணைவோம் திட்டத்திற்கு' ஒரு உதவி எண்தான் கொடுத்திருக்கின்றனர். 15 லட்சம் பேருக்கு உணவு, உடை வழங்கிவிட்டதாகத் தெரிவித்தார். எங்களால் நிறைவேற்றப்படாத சிறு, குறு, நடுத்தரர்க் தொழில்கள், போக்குவரத்து வசதி உள்ளிட்ட 1 லட்சம் மனுக்களைத் தலைமைச் செயலாளரிடம் அளித்ததாகக் கூறினார்.

அவர் அளித்த மனுக்களில் 98 ஆயிரத்து 752 மனுக்கள்தான் இருந்தன. ஏன் 1 லட்சம் மனுக்கள் இல்லை என நாங்கள் கேட்கவில்லை. இந்த மனுக்களை உடனடியாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு விசாரணைக்காக அனுப்பினார் தலைமைச் செயலாளர்.

அரசு மீது குற்றம் சொல்ல கொடுத்த மனுக்கள்தான் அவை. அந்த மனுக்களில் அவர் சொன்ன ஒரு கோரிக்கை கூட இடம்பெறவில்லை. அந்த மனுக்களில் எல்லாமே உணவுப்பொருட்கள் குறித்த மனுக்கள்தான். அந்த மனுக்கள் உணவு மற்றும் கூட்டுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டன.

இந்த நேரத்தில் அரசு செய்யும் வேலைகள் கடுமையானவை. இது கடுமையான நேரம். முதல்வர் இரவு, பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். அலுவலர்கள், அதிகாரிகளின் பணி மிகப்பெரியது. இச்சூழலில் திமுகவினர் இந்த வேலையை எங்களுக்குக் கொடுக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்ததால் நாங்கள் அந்த மனுக்களை ஆராயாமல் இருக்க முடியாது. அந்த மனுக்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அப்படி எல்லா மாவட்டங்களிலிருந்தும் அறிக்கைகளை வாங்கிவிட்டோம். இதில், ஒரு மனுவில் கூட டி.ஆர்.பாலு கூறிய கோரிக்கை இடம்பெறவில்லை. உணவுப்பொருட்கள் குறித்த கோரிக்கையே இடம்பெற்றிருக்கிறது.

மனுவில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாமல் அனுப்பியிருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனைச் செய்யாவிட்டாலும் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அரசைக் குற்றம்சாட்ட வேண்டும் என்றால் பொறுப்புடன் குற்றம்சாட்ட வேண்டும். ஆதாரத்துடன் குற்றம்சாட்ட வேண்டும். ஆதாரமே இல்லை. அத்தனை பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். உணவுத்தேவையை நாங்கள் முடித்துவிட்டோம்.

இத்தனை நாட்கள் ஊரடங்கு சமயத்தில் அனைவரும் நன்றாக இருப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளே காரணம். முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் குற்றம் சாட்டுகிறார். இது தரம் தாழ்ந்த அரசியல். ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

புகார் மனுவில் உள்ள சில எண்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், நாங்கள் அவ்வாறான புகார்களை அளிக்கவில்லை எனவும் சிலர் சொல்லியிருக்கின்றனர். திமுகவில் ஏதேனும் தருவார்கள் என்றுதான் சொன்னோம் என்கின்றனர். அரசாங்கம் எங்களுக்கு எல்லாம் கொடுத்துவிட்டது என மக்கள் தெரிவித்தனர்.

அரசு 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களுக்கு உணவுத்தேவையை நிறைவேற்றியிருக்கிறது. இது ஒரு போலியான உள்நோக்கத்துடன் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள். அரசை தவறான வழியில் குற்றம்சாட்ட ஸ்டாலின் முயல்கிறார்".

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x