

நெல்லை. பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனைக் குற்றவாளிகள் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புழல் சிறையில் கணினி பயிற்சிக்காக தண்டனைக் கைதிகள் சென்றபோது அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கடலூர், திருச்சி மத்திய சிறைக்கைதிகளுக்கும் கரோனா உறுதியான நிலையில் தற்போது பாளை சிறைக் கைதிகளுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதேபோல் மதுரையில் இருந்து சென்னைக்கு பயிற்சி சென்று 5 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவு இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் பாளை மத்திய சிறையில் உள்ள மூன்று கைதிகளுடன் சேர்ந்து நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 23-ம் தேதி வரை 282 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மீண்டும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 13 பேரும் மகராஷ்டிராவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிவந்தவர்கள். இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் இரு கைதிகள் உள்பட 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இதுவரை 316 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 146. நெல்லையில் ஒரே ஒரு முதியவர் கரோனாவுக்கு பலியானார்.