

தமிழகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் போன்றே புதுச்சேரியில் பாஜக சார்பில் 'மோடி மக்கள் உணவகம்' திறக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு அம்மா உணவகம் அமைத்து உணவுகளை அளித்து வருகிறது. அதேபோல், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வினோபா நகர் பகுதியில் தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் செல்வகுமார் என்பவர் 'மோடி மக்கள் உணவகம்' என்கிற மலிவு விலை உணவகத்தை அமைத்துள்ளார். இதனை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் இன்று (மே 27) தொடங்கி வைத்தார்.
இதில் காலை மற்றும் மதிய வேளைகளில் உணவுகள் விற்கப்படுகிறது. குறிப்பாக, இட்லி 1 ரூபாய், பொங்கல் 10 ரூபாய், டீ 5 ரூபாய் என காலை வேளைகளிலும் மதிய வேளைகளில் தயிர் சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் சாதம் என கலவை சாதங்கள் 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கட்சி தரப்பில் கூறுகையில், "இன்று தொடங்கப்பட்ட இந்த மலிவு விலை உணவகம் மாநிலம் முழுவதும் தொடங்கப்படும்" என தெரிவித்தனர்.