

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின் திருத்தச் சட்டம் 2020-க்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மதியம் கூடிய விவசாயிகள், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி. இளங்கீரன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதனையடுத்து அருகிலுள்ள வீராணந்தபுரம் கிராமத்திற்குச் சென்ற அவர்கள், விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், விவசாயி ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் கொட்டகையில் இருந்த மின் மோட்டாருக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பெண்கள் உள்ளிட்ட சிலர் ஒப்பாரி வைத்துத் தங்கள் சோகத்தை சொல்லி அழுதனர்.
இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசிய இளங்கீரன், “தமிழகத்தின் உணவுக் களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதியில் உணவு உற்பத்திக்கு இலவச மின்சாரம் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கிறது. இலவச மின்சாரத் திட்டத்தினால் மூன்று போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்த நிலையில், புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தால் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யப் பார்க்கிறது.
இதனால் விவசாயிகள் மற்றும் பல லட்சம் விவசாயத் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகிவிடும். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் புதிய மின் திருத்தச் சட்டத்தைக் கைவிட்டு இலவச மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும்” என்றார்.