

அரியலூரிலிருந்து பிஹாரை சேர்ந்த 109 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணியை நிறுத்த நேரிட்டது. இதனால், பலரும் வேலையிழந்து வீட்டில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், வேலைக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரையும் அரசு சொந்த ஊருக்கு அனுப்பி வருகிறது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்த பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 400 பேரை கடந்த வாரங்களில் சொந்த ஊருக்கு மாவட்ட நிர்வாகம் ரயில் டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனுப்பிவைத்தது.
அதனை தொடர்ந்து, மேலும், அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் ஆலை மற்றும் சில நிறுவனங்களில் வேலை செய்து வந்த பிஹாரைசேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், இன்று (மே 27) அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து பீகாரை சேர்ந்த 109 தொழிலாளர்களை 5 வேன்கள் மூலம் திருச்சி ரயில் நிலையத்துக்கு மாவட்ட நிர்வாகம் உணவளித்து அனுப்பிவைத்தது.
அங்கிருந்து இரவு 8 மணிக்கு செல்லும் சிறப்பு ரயில் மூலம் பீகார் செல்ல முழு ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அனுப்பி வைப்பு நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று பீகார் தொழிலாளர்களர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வேன்கள் மூலம் திருச்சி ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் தங்களது குடும்பத்தினருடன், சித்த வைத்தியம் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூருக்கு வந்துள்ளனர். வந்த சிறிது நாட்கள் தொழில் செய்த அவர்கள் ஊரடங்கு காரணமாக வெளியில் எங்கும் செல்ல முடியாமல், ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், தன்னார்வலர்கள் வழங்கி வரும் உணவு பொருட்களை உட்கொண்டு தங்களது கூடாரங்களிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இதற்கு மேலும், இங்கிருந்தால் சரிவராது என எண்ணிய இவர்கள், சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமென இன்று கீழப்பழுவூர் வழியே குடிமராமத்து பணிகளை பார்வையிட சென்ற ஆட்சியர் த.ரத்னாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.