Last Updated : 27 May, 2020 07:46 PM

 

Published : 27 May 2020 07:46 PM
Last Updated : 27 May 2020 07:46 PM

சிறுவாணி அணையின் நீர் உறிஞ்சு குழாய் அருகே உள்ள பாதை அடைப்புப் பணியில் கேரள அரசு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விசாரணை

குழாய் பாதையை பொக்லைன் மூலம் கண்டறிந்து அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கேரள அரசுத்துறையினர்.

கோவை

கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக சிறுவாணி அணை உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து தினசரி சராசரியாக 80 எம்.எல்.டி-க்கு மேல் நீர் எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் நீர் தினசரி வழியோரமுள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி அணையின் மொத்த நீர்தேக்க அளவு 49.50 அடி ஆகும். ஆனால், கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பிறகு, அணையின் பாதுகாப்பை கருதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுவாணி அணையில் 45 அடி அளவு வரை மட்டுமே கேரளா அரசால் நீர் தேக்கப்படுகிறது.

சிறுவாணி அணையின் 'இன்டேக் டவர்' எனப்படும் நீர் உறிஞ்சும் பகுதியில் மொத்தம் 4 வால்வுகள் உள்ளன. இவற்றின் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு எடுக்கப்படுகிறது. மேலே இருந்து 874.70 மீட்டரில் முதல் வால்வும், 870.59 மீட்டரில் 2-வது வால்வும், 866.44 மீட்டரில் 3-வது வால்வும், 861.50 மீட்டர் உயரத்தில் 4-வது வால்வும் உள்ளன.

இதற்கு அடிப்பகுதியிலும் குறிப்பிட்ட அடி அளவுக்கு நீர் தேங்கியுள்ளது. இந்த நீர் உறிஞ்சும் குழாய் அமைந்துள்ள இப்பகுதியில், மேற்கண்ட தரைப் பகுதியில் நீர் தேங்கியுள்ள பழைய குழாய் பாதையை கண்டறிந்து, அதை ஷட்டர் வைத்து மூடும் பணியில் கேரள அரசு நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். 4 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு மேற்கண்டப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதை நேரில் யாரும் கண்டறிந்து ஆய்வு செய்துவிடாமல் இருக்க, சிறுவாணி அணைக்கு செல்லும் பாதைகளில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணியை கேரள அரசு நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு செய்ய சென்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை, கரோனா தொற்றை காரணம் காட்டி கேரளா அரசு அனுமதிக்க மறுத்துவிட்டதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறும்போது, "சிறுவாணி அணையில் தற்போதைய நிலையில் 865.4 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. கேரள அரசு நிர்வாகத்தினர் பாதை அடைத்து ஷட்டர் போல் அமைக்கும் பணி மேற்கொள்வதாக கூறப்படும் தண்ணீர் உள்ள பகுதி 'டெத் ஸ்டோரேஜ்' என்ற அளவுக்கு கீழே உள்ள பகுதியாகும்.

தற்போதைய நிலையில் அணையில் போதிய நீர்மட்டம் உள்ளது. அடுத்த மாதம் தொடக்கத்தில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. அதன்படி, நீர்மட்டம் மேலும் உயரும். இதனால் 861.5 மீட்டருக்கு கீழே நீர்தேங்கியுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் பணியால் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இருப்பினும் தற்போது கேரள அரசு மேற்கொண்டு வரும் இப்பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும், சென்னை குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரிகளுக்கும் அறிக்கை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x