

அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள் என்று பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
''எதிர்பாரா சூழலில் இன்று அச்சு ஊடக செய்தி இதழ்கள் சந்தித்து வருகிற பெரும் இன்னல்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன். நமது மாபெரும் ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாகத் திகழ்பவை இந்த செய்தி இதழ்கள் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்கிற உண்மை. இன்றைய நெருக்கடி அவற்றின் இருப்பையும், வாழ்வையும் கேள்விக்கு ஆளாக்கியுள்ளது.
பல செய்தி ஏடுகள் ஏற்கெனவே பக்கங்களை, பதிப்புகளைக் குறைத்திருக்கின்றன. இருப்பினும் சமூகத்திற்கான தங்களின் தார்மீக கடப்பாட்டை ஈடேற்றி வருகின்றன. இந்தத் தொழில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைத் தருகிறது என்பதைச் சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சமூகத்திற்கு விழிப்பை ஊட்டுபவர்களாக இருப்பவர்கள்.
கோவிட் 19-ன் கடும் பாதிப்புகள் விளம்பர வருமானத்தை அறவே இல்லாமல் ஆக்கியுள்ளன. இந்த நிலைமை இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எதார்த்தங்கள் நிலைநிறுத்தப்பட்டு அவை வாழ்க்கை முறையாக மாறுகிற காலம் வரை இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு செய்தி இதழை நடத்துவதற்கு விளம்பர வருமானம் மிக அவசியமானது. ஆதார வளங்கள் இன்மை ஏற்பட்டதால், இதழ் சுற்று எண்ணிக்கையும் சரிந்துள்ளது.
அச்சு செய்தி இதழ் தொழில் அமைப்புகள் ஏற்கெனவே சில நிவாரண வேண்டுகோள்களை முன் வைத்துள்ளன. அவை மிக மிக நியாயமானவை என்பதால் முழு மனதோடு இந்தக் கோரிக்கைகளை ஆதரிக்கிறேன்.
* அச்சு செய்தித்தாள் மீதான சுங்க வரியைக் கைவிட வேண்டும்.
* நிலுவையில் உள்ள அரசு விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
* அரசு விளம்பரங்களுக்கு 100 சதவீதம் கட்டண உயர்வை வழங்க வேண்டும்.
* அச்சு ஊடகங்களை அரசின் அறிவிப்புகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
* இரண்டு நிதியாண்டுகளுக்கு வரி விடுமுறை அளிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை விரைவில் ஏற்று நிவாரணம் வழங்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்''.
இவ்வாறு வெங்கடேசன், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.