

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், மே 29-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
திமுக இளைஞரணி அரங்கக் கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி பட்டியலின நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் பதவி குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் விதமாக ஆர்.எஸ்.பாரதி பேசியதாக அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஆதித்தமிழர் பேரவை சார்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் மே 31-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்குப் பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை மே 29-ம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.