Published : 27 May 2020 05:40 PM
Last Updated : 27 May 2020 05:40 PM

சூலூர் விமானப்படை தளத்தில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் ரக படைப்பிரிவு: தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா தொடங்கி வைத்தார்

தேஜஸ் எம்கே-1 எஃப்.ஓ.சி ரக சண்டையிடும் விமானம். | படம்: ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் ரக படைப்பிரிவை இந்தியா விமானப்படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்று தொடங்கிவைத்தார்.

கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் 'தேஜஸ் எம்கே-1 ஐஓசி' ரக போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட 'தேஜஸ் எம்கே-1 எஃப்.ஓ.சி' என்ற படைப்பிரிவு தொடக்க விழா இன்று (மே 27) நடைபெற்றது.

இந்தப் படைப் பிரிவில் 16 சண்டையிடும் விமானங்கள் (ஃபைட்டர்ஸ்) மற்றும் 4 பயிற்சி விமானங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் 'தேஜஸ் எம்கே-1 எஃப்.ஓ.சி' ரக விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் திறன், தலா 200 கிலோ எடை கொண்ட 4 ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதலாக ஆயுதங்களை ஏற்றிச் செல்லுதல், எளிதில் கையாளும் வசதி, அதிநவீன மென்பொருளுடன் கூடிய தொழில்நுட்பம் என பல்வகைகளிலும் சிறப்பாக உருவாக்கப்பட்டு வரும் இந்த ரக விமானம் இன்று சூலூர் விமானப்படைத் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா புதிய ரக விமானத்தை அறிமுகப்படுத்திவைத்தார். இதில், தென்மண்டல தளபதி அமித் திவாரி, சூலூர் விமான நிலைய அதிகாரி எஸ்.கே.பெண்ட்சே, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.மாதவன், விமானங்கள் மேம்பாட்டு முகமை திட்ட இயக்குநர் கிரீஷ் தியோதர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விமானத்துக்கான சாவியை கமாண்டிங் அதிகாரி மணீஷ் துல்லானியிடம் ஒப்படைத்த விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா. படம்: ஆர்.கிருஷ்ணகுமார்

இதில் விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா பேசும்போது, "முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'தேஜஸ் எம்கே-1 எஃப்.ஓ.சி' ரக விமானம், மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு விமானம் சூலூருக்கு வந்துள்ளது. தொடர்ந்து, 15 போர் விமானங்கள் மற்றும் 4 பயிற்சி விமானங்கள் இங்கு வந்து சேரும். இந்திய விமானப்படைக்கு இது புதிய பலத்தைக் கொடுத்துள்ளது.

சர்வதேச அளவில் இந்திய விமானப்படை சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த 10, 20 ஆண்டுகளுக்கான எங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஹெச்.ஏ.எல்., விமான மேம்பாட்டு முகமை, சிறு, குறுந்தொழில் துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.

விமானப்படைக்கு நிதி ஒதுக்குவதில் சில சிரமங்கள் இருந்தாலும், பலத்தை மேம்படுத்துவதில் அது தடையாக இருக்காது. பெருமளவு தேவைகளை உள்நாட்டு உற்பத்தி மூலமாகவே நாங்கள் பூர்த்தி செய்துகொள்கிறோம். தவிர்க்க முடியாத தருணங்களில்தான் வெளிநாடுகளை நாடுகிறோம்" என்றார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன் கூறும்போது, "தற்போது 'தேஜஸ் எம்.கே.1' ரக விமானங்களை உருவாக்கி வருகிறோம். 'எம்.கே.2' ரக விமானங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் விமானங்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளதால், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.

விழாவையொட்டி, சூலூர் விமானப்படை தளத்தில் தேஜோஸ் ரக சண்டையிடும் விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போர் விமானத்துக்கு இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் மற்றும் சீக்கிய முறைப்படி வழிபாடு நடத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x