

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்மாய்களில் யூக்கலிப்டஸ் மரங்கள் அடர்ந்துள்ளதால் குடிமராமத்து திட்டம் மூலம் தூர்வாரும் பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் சுமார் ரூ.21 கோடியில் 43 நீர்நிலைகளைத் தூர்வாருவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஆவுடையார்கோவில் அருகே சாத்தக்கண்மாய், ஏனங்கண்மாய், இச்சிக்கோட்டை கண்மாய், அறந்தாங்கி அருகே சிலட்டூர் என 20க்கும் மேற்பட்ட கண்மாய் மற்றும் அதன் நீர்பிடிப்புப் பகுதியில் வனத்துறை சார்பில் யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளாகவும், மரங்களாகவும் உள்ளன.
தூர்வாரும் பணிக்கு இடையூறாக உள்ள இம்மரங்களை உடனே அகற்றினால்தான் பணி தொடங்க முடியும். பல முறை கோரிக்கை விடுத்தும் அகற்றப்படாததால் தூர்வார முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கண்மாய் பாசன ஆயக்கட்டுதாரர்கள் கூறும்போது, "சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத் துறை அலுவலர்களிடம் தடையில்லாச் சான்று பெறாமலே யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை வனத்துறை பயிரிட்டுள்ளது.
இம்மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு தற்போதுதான் கண்மாய் தூர்வாரப்பட உள்ளது. இப்பணி நிறைவுற்றால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாசனம் உறுதி செய்யப்படுவதோடு, குடிநீர் பிரச்சினை தீரும்.
ஆனால், கண்மாய்களின் கரையோரம் மற்றும் உள்பகுதியில் மரங்களை வேரோடு அகற்றினால் மட்டுமே தூர்வாரும் பணியைத் தொடர முடியும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை" என்றார்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் கூறும்போது, "வனச்சரகர்கள் மூலம் கண்மாய்களில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.