

பாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.என்.லட்சுமணனைச் சந்திக்க இன்று (மே 27) சேலம் வந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அவரைப் பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையிலும் கரோனா தொற்று பரவாமல் தடுப்புப் பணியில், மண்டல அளவில் கவனம் செலுத்தி மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்துக்கு மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஜன்தன் வங்கிக் கணக்கில் 70 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.500 வழங்கி வருகிறது. அதேபோல, உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் அளித்து வருகிறோம். மேலும், கூடுதலாக ரேஷன் அரிசி ஐந்து கிலோ வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
உலக அளவில் கரோனா தொற்று மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பேராபத்தை விளைவித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி துல்லியமாக திட்டமிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் கரோனா தொற்று தடுப்புப் பணியை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.
கரோனா தொற்று தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா தொற்று தடுப்புப் பணியில் எதிர்க்கட்சிகளும், நாம் ஒவ்வொருவரும் கரோனாவை எதிர்கொள்ள வேண்டிய கடமை உள்ளது.
கரோனா தொற்று தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசு சிறப்பாகச் செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வேண்டுமென்றே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி, அரசியல் செய்து வருகின்றன.
திமுகவைச் சேர்ந்த வி.பி.துரைசாமி நாகரிகம் கருதி மரியாதை நிமித்தமாக வந்து பார்த்து வாழ்த்து சொன்னதை குற்றம் கூறுவது ஏற்க முடியாத ஒன்று. அவரது வருகை எங்களுக்கு கட்சியைக் கீழ் மட்டத்திற்குக் கொண்டு செல்ல உத்வேகமானதாக உள்ளது.
மேலும், பல கட்சிகளில் இருந்தும், இயக்கங்களில் இருந்தும் முக்கியத் தலைவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கரோனா தொற்று தடுப்புப் பணியிலும், அரசை சிறப்பாக நடத்தி வருவதும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தள்ளது. எனவே, பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எங்களுடன் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அதிக பரிசோதனை செய்வதே மூலம் கரோனா தொற்று அதிக அளவில் இருப்பதற்குக் காரணமாக உள்ளது. மேலும், பலருக்கும் கரோனா தொற்று பரிசோதனையை சென்னையில் செய்து வருகின்றனர். சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திட அரசு தனி கவனம் செலுத்தி வருவதன் மூலம், கரோனா தொற்று பரவாமல் தடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது".
இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.