

தமிழகத்தில் அம்மா மருந்தகங்களில் கடந்த மாதம் வரை ரூ.239.90 கோடிக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறை திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், ''தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 044 விவசாயிகளுக்கு ரூ.1515.61 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக குறைந்த விலையில் கடந்த மாதம் 31-ம் தேதி வரை, ரூ.28.19 கோடிக்கு 9824.162 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்கப்பட்டுள்ளன.
அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 சதவீதம் வரை தள்ளுபடியில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் 100 அம்மா மருந்தகங்கள் மற்றும் 195 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்படுகின்றன.
இந்த மருந்தகங்களில் கடந்த மாதம் 31-ம் தேதி வரை ரூ.239.90 கோடிக்கு மருந்துகள் விற்கப்பட்டுள்ளன'' என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.