Last Updated : 27 May, 2020 04:23 PM

 

Published : 27 May 2020 04:23 PM
Last Updated : 27 May 2020 04:23 PM

நூலகங்களைத் திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

தேனி

நூலகங்களை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பொதுநூலகத்துறை இயக்குநர் அலுவலக உத்தரவு:

தற்போது கோடைகாலமாக இருப்பதால் பூச்சிகளின் தாக்கம் குறைவாக இருந்தாலும் எலிகள், அணில்களின் பாதிப்பு இருக்கும். தூசிப்படிவுகளும் ஏற்பட்டிருக்கும். காற்றோட்டம் இல்லாததால் புத்தகங்களில் மக்கிப்போன மணம் ஏற்படும். புத்தகங்களைக் கையாளாததால் பைண்டிங் இறுகிப்போய் இருக்கும்.

எனவே முன்னேற்பாடு நடவடிக்கைகள் அவசியம். அடைபட்ட காற்றையும், தூசிகளையும் வெளியேற்ற வேண்டும்.

புத்தகங்களை சுத்தம் செய்யவில்லை என்றால் அதன் நிறம் மாறும்.எனவே சுத்தம் செய்து பிரித்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம் புத்தகப்புழுவின் தாக்கத்தையும் அறிய முடியும்.

பூஞ்சைக்காளான் பாதித்திருந்தால் வைப்பறையில் நாப்தலின் உருண்டை வைக்க வேண்டும்.

நூலகங்களின் உட்புறத்தில் உள்ள மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.

ஜூன் முதல்வாரத்தில் உகந்த இரு தினங்கள் நூலகங்களை இது போன்று சுத்தப்படுத்தி தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். வாசகர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

வாசகர்கள் அனைவரும் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடும் போது கண்டிப்பாக தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் கரோனா உள்ளிட்ட பாதிப்பின் போது தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.

குறிப்புதவி நூல்கள் பிரிவு மற்றும் குடிமைப்பணி நூல்கள் பிரிவுகளில் அதிக வாசகர்கள் வந்தால் முன்பதிவு அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வாசகர்கள் ஆரோக்கியசேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

கரோனா பாதிப்பு நபர் வந்து சென்றது அறிந்தால் உடன் மாவட்ட நூலக அலுவலகம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம், அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x