ஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

ஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு
Updated on
1 min read

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தனது பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.

இன்று காலை பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நிறுத்த இயக்குனர் மூலமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. மீறி நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் வகுப்பு நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்கு அனைத்து பள்ளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “60 நாட்களுக்கும் மேலாக தமிழக பள்ளிக் கல்வி மாணவர்கள் கரோனா எனும் கொடிய நோய் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டுச் சிறையில் முடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் படித்ததை மறந்து விட்டார்கள். கற்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

அதை மீட்டெடுப்பதற்காக தனியார் பள்ளிகள் பெற்றோரிடமோ மாணவரிடமோ எந்தவிதக் கல்விக் கட்டணமும் பெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதற்கு முன் கல்வி அமைச்சரே ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று கூறியுள்ளன. அதற்கான கட்டணம் கூட பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருப்பது சரியல்ல'' என்று அனைத்து பள்ளிகள் சங்கம் தெரிவித்தது.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், உடனே மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக புது விளக்கம் ஒன்றை தொலைபேசி வாயிலாக செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

“ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நாம் தடுக்க முடியாது. மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தக் கூடாது. தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதை நாம் தடுக்க முடியாது” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in