

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விடைத்தாள் திருத்தும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 முதன்மை விடைத்தாள் திருத்தும் மையங்களும், 4 துணை விடைத்தாள் திருத்தும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் மொத்தம் 1,32,518 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. இந்த பணிக்காக 1,344 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களும் துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்த ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டனர். படம்: என்.ராஜேஷ்
தினமும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வதற்கும், ஒவ்வொரு ஆசிரியருக்கும் 3 முககவசங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விடைத்தாள் திருத்துவதற்கு வசதியாக ஒரு அறையில் முதன்மை தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 8 பேர் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் வெவ்வேறு ஒன்றியங்களில் இருந்து மதிப்பீட்டு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார் ஆட்சியர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.