Last Updated : 27 May, 2020 02:00 PM

 

Published : 27 May 2020 02:00 PM
Last Updated : 27 May 2020 02:00 PM

ஊரடங்கால் திருமண மண்டபங்கள் மூடல்: நடமாடும் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் ரதம்

ஜூஸ் கடையாக மாறிய திருமண ரதம்.

புதுச்சேரி

ஊரடங்கால் திருமண விழாக்கள் ரத்தானதால் மணமக்கள் வரவேற்புக்காகப் பயன்படும் ரதம் போல் அலங்கரிக்கப்படும் காரை நடமாடும் ஜூஸ் கடையாக்கி வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டன. இதில் திருமண மண்டபங்கள் மூடப்பட்டு திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டன. கோயில் விழாக்கள் உள்ளிட்ட விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இத்துறை சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஒலிப்பெருக்கி நிலையம் நடத்துவோரும் இதில் விதிவிலக்கல்ல. புதுவை கென்னடி நகரில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் நாகராஜ். கடந்த 2 மாதங்களாக விழாக்கள் இல்லாததால் தனது கடையை மூடி உள்ளார். வேறு வருமானத்திற்கு வழியில்லாததால் மணமக்களை அழைத்து வரும் ரதமான காரை ஜூஸ் கடையாக மாற்றியுள்ளார். காரின் மேல் பகுதியைக் கழற்றிவிட்டு அங்கு ஜூஸ் தயாரிக்க எந்திரங்களை வைத்துள்ளார்.

இது தொடர்பாக நாகராஜ் கூறுகையில், "வியாபாரம் இல்லாததால் மாற்றுத் தொழிலில் இறங்கிவிட்டேன். சாத்துக்குடி, எலுமிச்சை, மாதுளை ஜூஸ், எலுமிச்சை சோடா, மோர் விற்பனையும் செய்யத் தொடங்கியுள்ளேன்.

மணமக்கள் ரதமாகப் பயன்படுத்திய காரை மறைமலை அடிகள் சாலையில் நிறுத்தி விட்டு வியாபாரம் செய்கிறேன். ஜூஸ் போட ஜெனரேட்டர் பயன்படுத்துகிறேன். காரை வீட்டிலிருந்து எடுத்து வந்து மாலை வரை வியாபாரம் செய்து புறப்படுகிறேன்.

இதில் கிடைக்கும் வருவாய் ஓரளவு குடும்பத்தைக் காக்க உதவுகிறது. கரோனாவுக்குப் பிறகு நிலைமை சீரானவுடன் மணமக்களை அழைத்துச் செல்லும் காராக மாற்றி பழைய தொழிலுக்குச் சென்றுவிடுவேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x