

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லம் உள்ளிட்ட ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டு, அவர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். மேலும் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபாவும், தீபக்கும் தனியாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.40 கோடி வருமான வரி பாக்கிக்காக அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள சில சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையும் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
இதனிடையே, ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பித்தது.
இந்நிலையில், ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கிலும், அதேபோல தங்களை ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கக் கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த இடையீட்டு வழக்கிலும் நீதிபதிகள் இன்று (மே 27) காலை தீர்ப்பளித்தனர்.
அப்போது நீதிபதிகள், "ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை முதல்வரின் அதிகாரபூர்வ அலுவலக இல்லமாக ஏன் மாற்றக் கூடாது? ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம். ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை அறக்கட்டளையாக அமைக்க வேண்டும். இது தொடர்பாக, 8 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்த நீதிபதிகள், ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.