Published : 27 May 2020 11:18 am

Updated : 27 May 2020 11:18 am

 

Published : 27 May 2020 11:18 AM
Last Updated : 27 May 2020 11:18 AM

வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை விமானம், கப்பல் வழியாக மீட்க நடவடிக்கை: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

ks-alagiri-urges-to-rescue-stranded-tamilians-in-gulf-countries
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை விமானம், கப்பல் வழியாக உடனடியாக தமிழகம் அழைத்துவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 27) வெளியிட்ட அறிக்கை:


"கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கரோனா தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். மறுபக்கம் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை துறந்து, கடுமையான பாதிப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வளைகுடா நாடுகளில் ஏறத்தாழ 85 லட்சம் இந்தியர்கள் அங்கே பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிற மருத்துவ சிகிச்சையை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வளைகுடா நாடுகளின் அரசுகள் வழங்குவதில்லை. இதில் பெரும்பாலானவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலான தமிழர்கள் தமிழகம் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சவுதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவையை எதிர்பார்த்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இத்தகைய இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக, இந்திய அரசு 'வந்தே பாரத்' திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்படி ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தும், அமெரிக்கா, பிரிட்டன், வங்காள தேசம், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூரிலிருந்தும் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். முதல் இரண்டு வார அட்டவணை வெளியானதில், சவுதியிலுள்ள தமிழர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை கொள்கின்றனர்.

முதல் வாரத்தில் மொத்தம் 64 சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் 25 சேவைகள் வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் இவற்றில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு வெறும் 4 சேவைகள் மட்டுமே. அவையும் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் ஆகிய நாடுகளுக்கானவையே. சவுதி, பஹ்ரைன், கத்தார் நாடுகளில் வாழும் தமிழர்கள் இதில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

சவுதியிலிருந்து மூன்று விமானங்கள் கேரளாவுக்கும், இரண்டு சேவைகள் டெல்லிக்குமாக திட்டமிடப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் பல பகுதிகளிலிருந்தும் தாயகம் திரும்ப ஆயிரக்கணக்கான தமிழர்கள் விண்ணப்பித்திருந்தும், ஒரு சேவை கூட ஒதுக்கப்படாதது சவுதி வாழ் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

இரண்டாம் வாரத்தில் அதிகபட்சமாக 109 சேவைகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், சவுதிக்காக இயக்கப்படவுள்ளது வெறும் 6 சேவைகள் மட்டுமே. அவை எந்தெந்த நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது எனும் விபரம் வெளியிடப்படவில்லை.

ஆனால், சவுதியிலிருந்து தமிழகம் திரும்ப பதிவு செய்துள்ள கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள், சுற்றுலா விசாவில் சென்றவர்கள், வேலை இழந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மூன்று சர்வதேச விமான நிலையங்கள் இருந்தும், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், ஏன் தமிழக விமான நிலையங்கள் பட்டியலிடப்படவில்லை எனும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரோடு உடனடியாக தொடர்புகொண்டு வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை விமானம், கப்பல் வழியாக உடனடியாக தமிழகம் அழைத்துவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குகே.எஸ்.அழகிரிமுதல்வர் எடப்பாடி பழனிசாமிCorona virusLockdownKS alagiriCM edappadi palanisamyCORONA TN

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x