

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று வரை 303 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50க்கு மேல் இருந்தால் அந்த மாவட்டத்தை சிவப்பு மண்டலமாகவும், 50 பேருக்குக் குறைவாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அம்மாவட்டத்தை ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பே இல்லாத மாவட்டத்தை பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியன்று டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 3 பேருக்கு முதலாவதாக கரோனா தொற்று ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் 50 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2 பேர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் 48 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதன் பிறகு 5 நாட்களாக கரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்தது.
இந்த சூழ்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து வந்த சிறு வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் என 1,000க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் ஆரஞ்சு மண்டலத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே நீடித்த விழுப்புரம் மாவட்டம் மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறியது.
தொடர்ந்து, கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. மாவட்டத்தில் இதுவரை இந்நோயால் 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏற்கெனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 303 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்த விழுப்புரம் மாவட்டம் நேற்று (மே 26) முதல் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. இன்னும் சில நாட்களில் விழுப்புரம் மாவட்டம் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.