

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் கொடுத்து சிகிச்சை அளித்ததில் 5 நாட்களில் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.
உலகையே அச்சுறுத்தி வருகிறது கரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த அதிகாரப்பூர்வமான மாத்திரை, மருந்துகள் இல்லாத நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுரக் குடிநீர், ஆடாதொடை மணப்பாகு மற்றும் நிலவேம்பு குடிநீர் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கு உத்தரவிடுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் தமிழக சித்த மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி மருத்துவத்துடன் (ஆங்கில மருத்துவம்) சித்த மருந்துகளை கொடுக்குமாறு கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் கரோனா வைரஸை குணப்படுத்தும் என்பதற்கான எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டை சிலர் வைத்தனர். இதனை ஒரு சவாலாக ஏற்ற தாம்பரம் சானடோரியத்தில் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை), வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை விரைவாக குணப்படுத்திக் காட்டும் முயற்சியில் இறங்கியது.
இதையடுத்து, எஸ்ஆர்எம் மருத்துவ மனையுடன் இணைந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 13 நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளுடன் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் வழங்கி ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 2 பேர் மூன்று நாட்களிலும், 11 பேர் 5 நாட்களிலும் முழுமையாக வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
அலோபதி - சித்தா ஒருங்கிணைந்து அளிக்கப்படும் சிகிச்சையால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் மீனாகுமாரியிடம் கேட்டபோது, “மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிக்காட்டு நெறிமுறைகளின்படி கரோனா வைரஸ் பரவலை தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாகவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு அலோபதி மருந்துகளுடன், இந்த 2 குடிநீரும் வழங்கி சிகிச்சை அளித்து குணப்படுத்தி இருக்கிறோம். அலோபதி - சித்தா ஒருங்கிணைந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படும். சித்த மருத்துவத்தின் மூலமாக மட்டும் வைரஸ் தொற்றை குணப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.