Published : 27 May 2020 07:34 AM
Last Updated : 27 May 2020 07:34 AM

தமிழகத்தில் இருந்து தினமும் 10 ரயில்களில் வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை: நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன் தகவல்

சென்னை

தமிழகத்தில் சிக்கியுள்ள 4 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்களை தினமும் 10 ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருவதாக நிதித் துறைச் செயலர் ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவுகளில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் சமீபத்திய கணக்கின்படி 4 லட்சத்து 782 வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள், சொந்த ஊர் செல்வதில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசின்அறிவுறுத்தல்படி, அவர்களை சொந்த மாநிலங்களுக்கு தமிழக அரசு அனுப்பி வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தினமும் 10 ஆயிரம் பேரை அனுப்ப வருவாய்த் துறைச் செயலர் அதுல்யமிஸ்ரா தலைமையிலான குழு செய்து வருகிறது. அதேபோல், வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகள் குறித்து, தமிழக அரசின் நிதித் துறைச் செயலர் ச.கிருஷ்ணன் கூறியதாவது:

மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், அந்தந்த மாநிலங்களில் இருந்து எவ்வளவு பேர் தமிழகத்துக்கு வரவேண்டும். அதேபோல் இங்கிருந்து எவ்வளவு பேர் அந்தந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அனைத்து தொழிலாளர்களும் ரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இங்கிருந்து செல்பவர்களுக்கான ரயில் கட்டணத்தை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து செலுத்திவிடுகிறோம். அதில், ஏற்கெனவேமத்திய அரசு அளித்த தொகையைவிட கூடுதலாக செலவிடப்படுகிறது. தற்போது மாநில அரசின் பணம்தான் செலவிடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களுடன் தினசரி 10 ரயில்கள் வரைதமிழகத்திலிருந்து செல்கின்றன. அதேநேரம் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வருவோர் எண்ணிக்கை குறைவுதான். அதற்கேற்ப ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மும்பையில் இருந்து தமிழகம் வர உதவி

கரோனா ஊரடங்கால் மும்பையில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்களை ‘ஹங்கர் கலெக்டிவ்’ என்ற அமைப்பு, மளிகை பொருட்கள், சமைத்த உணவு வழங்கி பாதுகாத்து வருகிறது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ராஜஸ்ரீ சாய் கூறியதாவது:‘ஹங்கர் கலெக்டிவ்’ அமைப்பு, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மும்பை, டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உணவு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் அவர்களை தமிழகத்துக்கு அனுப்புவதற்கான நடைமுறைகளை, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளை தொடர்புகொண்டு, உரிய அனுமதி பெற்று, தமிழகத்துக்கு அனுப்பி வருகிறோம். எனவே மும்பையில் சிக்கியுள்ள தமிழர்கள், 7021210549 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். நிதி மற்றும் உணவு வழங்க விரும்புவோரும் தொடர்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.hungercollective.com என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x