

பயணிகள் வர தயக்கம் காட்டியதால் மதுரை விமானநிலையத்தில் ஒரே ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டன. மற்றவை விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
‘கரோனா’ ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் நேற்று நாடு முழுவதும் உள்நாட்டு விமானப்போக்குவரத்திற்கு 1162 விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
அதில், வெறும் 532 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரையில் இருந்து டெல்லி, பெங்களூரு, திருவனப்புரம், சென்னை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு தினமும் 24 விமானங்கள் இயக்கப்பட்டன.
இதில், நேற்று 6 விமானங்கள் சென்னை, பெங்களூரு, டெல்லி நகரங்களுக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் 4 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று பயணிகள் வரத்து மேலும் குறைந்ததால் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் மட்டுமே ஒரே ஒரு விமானம் சேவை மட்டுமே இயக்கப்பட்டன.
இ-பாஸ் கிடைப்பதில் ஏற்படும் குளறுபடி, நீண்ட நேர கால தாமதம், பிற மாநிலங்களிலும் இருக்கும் ‘கரோனா’ ஊரடங்கு கட்டுப்பாடு, திடீரென்று விமானங்கள் ரத்து செய்யப்படுவது, பொதுபோக்குவரத்து குறைபாடு போன்ற காரணங்களால் பயணிகள் விமானங்களில் பயணம் செய்வதற்கு தயக்கம் காட்டுவதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.