Published : 26 May 2020 07:10 PM
Last Updated : 26 May 2020 07:10 PM

அரசு அறிவித்த நிவாரணம் கிடைக்கவில்லை: கதறும் வைகை ஆற்று சலவைத் தொழிலாளர்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி குடிசைத்தொழில்களை அழித்துவிட்டன. அப்படி அழிந்த தொழில்களில், முக்கியமானது சலவைத்தொழில். இன்று அயன் பாக்ஸ், வாஷிங் மிஷின் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம்.

இவற்றின் பயன்பாடு அதிகரிப்பால் சலவைத்தொழில் ஏற்கெனவே நலிவடைந்து போய் இருந்தது. இந்தத் தொழிலாளர்கள் பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர்.

ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஆங்காங்கே இந்த தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றனர்.

இந்த தொழிலுக்கு மழையும், வெயிலும் ஒரு சேர அமைய வேண்டும். இதில் ஒன்று இல்லாவிட்டாலும் இந்த தொழில் பாதிக்கப்படும். ஆனால், இன்று ‘கரோனா’ இந்த தொழிலை ஒட்டுமொத்தமாக முடக்கிப்போட்டுவிட்டது. துணிகளை சலவைப்போட்டால் சலவைத்தொழிலாளர்கள் மூலம் கரோனா தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தால் மக்கள் துணிகளை சலவைக்கு போடுவதில்லை.

அதுபோல், அயன் செய்வதற்கும் துணிகளை போடவில்லை. கடந்த 2 மாதமாக வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளுக்குள் இவர்கள் முடங்கிப்போய் உள்ளனர். தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் இவர்களிடம் சலவைக்கு துணிகள் போடவும், துணிகளை அயன் செய்யவும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால், ரேஷன் அரிசியை கொண்டு கால் வயிற்றுக்கும், அரை வயிற்றுக்கும் சாப்பிட்டு நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மதுரை ஐதராவதநல்லூர் சலவை தொழிலாளர்கள் சங்க தலைவர் ஏ.ராஜன் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சலவைத்தொழிலாளர்கள் உள்ளனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நாங்கள், பொதுமக்களிடம் வாங்கும் துணிகளை வைகை ஆற்றங்கரையோரங்களில் வைத்து துவைத்து கொடுப்பது, அயன் வண்டி கடை நடத்துவது போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளோம். தற்போது

அயன் கடைகளை சும்மா திறந்து வைத்துள்ளோம். சலவைக்கும் துணி வரவில்லை. மக்கள் வெளியே போனால்தான் துணிகளை தேய்த்துப்போடுவார்கள். ஊரடங்கால் அவர்கள் வீட்டில் முடங்கியதால் கயிலி, டவுசர் போட்டுக்கிறாங்க. நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருந்தாலும் வங்கி கணக்கு எண் கொடுத்தவர்களுக்கு மட்டுமே அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணம் கிடைத்தது. எங்களில் பெரும்பாலானவர்களுக்கு

வங்கி கணக்கே இல்லை. அதனால், 100 தொழிலாளர்களில் 20 சதவீதம்பேருக்குதான் அரசு நிவாரணம் கிடைத்துள்ளது. மதுரையில் வைகை ஆற்றில் சலவை துறை கட்டி, வேலைபார்த்துக் கொண்டிருந்தோம். ஆற்றில் பாலம் கட்டுவுதால் சலவை துறையை இடித்துவிட்டார்கள்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டும் தற்போது தொழில் செய்ய முடியவில்லை. ஆட்சியரிடடம் மனு கொடுத்தோம். அவரும் வந்து பார்த்தார். வேண்டிய உதவி செய்கிறோம் என்று சொன்வார். ஆனால், ஒரு உதவியும் கிடைக்கவில்லை. சிறு தொழில்களுக்கு கடன் செய்வதாக கூறும் அரசு, சலவை தொழிலை பற்றி எதுவும் சொல்லவில்லை. அயன் வண்டி இல்லாத தொழிலாளர்களுக்கு கடன் கொடுத்தால் அவர்கள் அயன் பெட்டி வாங்கி பிழைத்துக் கொள்வார்கள், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x