Published : 26 May 2020 06:45 PM
Last Updated : 26 May 2020 06:45 PM

விவசாயிகள் பெயரில் தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்த முத்தரசன் வலியுறுத்தல்

தமிழக அரசின் அரசாணையை மணல் வியாபாரிகள் தவறாகப் பயன்படுத்தி, நீர்வளக் காப்புக் கவசமாக இருக்கும் மணல் கடத்தல் செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நீர்நிலைகளில் வண்டல் மண், சவுடு மண், களிமண், சரளை மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என கடந்த 2017 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையின் படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியோடு இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை மணல் வியாபாரிகள் தவறாகப் பயன்படுத்தி, நீர்வளக் காப்புக் கவசமாக இருக்கும் மணல் கடத்தல் செய்து, ஒரு லோடு மணல் ரூபாய் 60 ஆயிரம் வரை விற்பனை செய்து வருவதாக ஏராளாமான புகார்கள் வருகின்றன.

இந்த மணல் கொள்ளை தொடருமானால், தமிழகம் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேலும் இழந்து, கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் பேரபாயம் உருவாகி வருகிறது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். அண்மையில் நடந்த ஆய்வின் படி தமிழ்நாடு முழுவதும் 463 பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான அளவைத் தாண்டியுள்ளது.

35 பகுதிகளில் கிடைக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்து எதற்கும் பயனற்றதாக கெட்டுப்போய் விட்டது. தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும். நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது''.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x