

தாயார் மற்றும் சகோதரியுடன் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பின் மூலம் பேச முருகனுக்கும் நளினிக்கும் அனுமதி அளிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரது வழக்கில், ‘‘முருகன், நளினி இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று கேட்டிருந்தனர்.
மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். ஏற்கெனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆகவே மேற்கண்ட கோரிக்கையை அனுமதிக்க உத்தரவிடவேண்டும்”. எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,பி.டி.ஆஷா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவிற்கு பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு நீதிபதிகள், வாட்ஸ் ஆப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேள்வி எழுப்பினர். பின், மனுவுக்கு நாளை மறுதினம் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.