

தகுதிச் சான்றிதழ் (FC) இல்லாமல் புதுச்சேரியில் அரசு ஆம்புலன்ஸ்கள் பல ஆண்டுகளாக இயங்கி வரும் அவலம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர், முதல்வரிடம் மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசுத் தரப்பில் ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன. ஆனால் அவை பராமரிப்பின்றி, மோசமான நிலையில் இருப்பதாகப் பல புகார்கள் வந்தபடி இருந்தன. இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி, ஆம்புலன்ஸ் நிலை தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவலைக் கேட்டிருந்தார். அதில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களே மோசமான நிலையில் இருக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அவர் ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியிடம் இன்று புகார் மனு தந்துள்ளார்.
புகார் தந்த ரகுபதி கூறியதாவது:
''புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பாட்டில் இருக்கும் ஐந்து ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. ஆனால் தகுதிச் சான்று வாங்காமலே அவை இயங்கி வருகின்றன. கடந்த 2007-ல் வாங்கிய ஆம்புலன்ஸுக்கு 2008-ல் இருந்து எஃப்சி எடுக்கவில்லை. அதேபோல் 2009-ல் வாங்கிய இரு ஆம்புலன்ஸ்கள் 2011-ல் இருந்து எஃப்சி எடுக்காமல் இயங்கி வருகின்றன. 2010-ல் வாங்கிய ஆம்புலன்ஸ் 2012-க்கு பிறகும், 2010-ல் வாங்கிய வாகனம் மார்ச் 2020-க்குப் பிறகும் எஃப்சி எடுக்காமல் இயங்கி வருகிறது.
அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்களே எஃப்சி எடுக்காமல் இயங்குவது ஆபத்தானது. நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை எஃப்சி எடுக்க வேண்டும் என்று தெரிந்தும், அலட்சியமாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். கரோனா தொற்றுள்ள இக்காலத்தில் காப்பீடு, தகுதிச் சான்று இல்லாமல் ஆம்புலன்ஸ்களை இயக்கி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.
இதற்குப் பொறுப்பு வகித்து, அலட்சியமாகச் செயல்பட்டு எஃப்சி எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை தேவை. அத்துடன் ஆம்புலன்ஸ்களுக்கு உடனடியாக எஃப்சி எடுப்பது அவசியம் என்று ஆளுநர், முதல்வரிடம் மனு தந்துள்ளேன்".
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.