Last Updated : 26 May, 2020 02:27 PM

 

Published : 26 May 2020 02:27 PM
Last Updated : 26 May 2020 02:27 PM

இலவச மின்சாரம் ரத்து திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறாவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (மே 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

''விவசாயிகள், நெசவாளர்கள், குடிசைவாசிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காக மத்திய அரசு சட்ட முன்வடிவு கொண்டு வருவது மிகவும் தவறான செயல். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினால்தான் அதிக அளவில் விளைபொருள் உற்பத்தி செய்ய முடியும். நம் நாடு உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு லட்சியத்தை அடைய முடியும்.

இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சி.சுப்பிரமணியம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரே காரணமாக இருந்தனர். இதுபோல விவசாயத்தில் படிப்படியாக முன்னேறி வருகிறோம். மின்சாரத்துக்குப் பணம் கட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இதனால் நாராயணசாமி நாயுடு, தமிழகம் தழுவிய போராட்டத்தை நடத்தினார். இதன் பிறகு இலவச மின்சாரத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.

இதைப் பறிக்க நினைப்பது தவறான செயல். இது, இந்தியாவின் வளர்ச்சிக்குக் குந்தகத்தை விளைவிக்கும். மழை பெய்யாவிட்டால் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுவிடுவர். இதனால் நாட்டில் உணவு உற்பத்தியும் குறைந்துவிடும். மீண்டும் அமெரிக்காவிடமிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும்.

இத்திட்டத்தை எதிர்ப்பதாக தமிழக முதல்வர் கூறுகிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், நீட் தேர்வைப் போல, இத்திட்டத்தையும் பிரதமர் மோடி செயல்படுத்துவார். எனவே, அதிமுக அரசு சொல்வதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. இதைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க் கிழமை) 6,340 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனவே மாநில அரசுகள் இத்திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் தமிழக அளவில் சிறைக்குச் செல்லக்கூடிய போராட்டத்தை நடத்துவோம்''.

இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

அப்போது வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x