Last Updated : 26 May, 2020 12:04 PM

 

Published : 26 May 2020 12:04 PM
Last Updated : 26 May 2020 12:04 PM

கடும் விலையேற்றத்தால் புதுச்சேரியில் வெறிச்சோடிய மதுக்கடைகள்- திருவிழா கூட்டத்தில் சாராயக்கடைகள்

புதுச்சேரியில் சாராயக்கடைகளில் குவிந்துள்ள கூட்டம்

புதுச்சேரி

கடும் விலையேற்றத்தால் வெறிச்சோடி மதுக்கடைகள் புதுச்சேரியில் காணப்படுகின்றன. அதே நேரத்தில் சாராயக்கடைகள் திருவிழா கூட்டம் போல் காணப்படுகின்றன.

ஊரடங்கு உத்தரவால் புதுவையில் பூட்டிக்கிடந்த மதுக்கடைகள் 62 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.

தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களுக்கு இணையாக புதுவையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையில் மட்டும் விற்கப்படும் மதுபானங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. சாராயத்திற்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. 2 மாதத்திற்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முதல் நாளான நேற்று அதிகளவில் கூட்டம் இருந்தது.

ஆனால் மதியத்துக்கு பிறகு கூட்டம் குறைவானது. மொத்த மதுபான நிலையங்களில் மட்டுமே அதிகளவு கூட்டம் இருந்தது. முதல் நாளான நேற்று மட்டும் ரூ. 4 கோடிக்கு மதுபானங்கள் புதுச்சேரி, காரைக்காலில் விற்பனையானது. ஆனால் இரண்டாம் நாளான இன்று மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன
மதுபிரியர்கள் கூறுகையில், "ரூ.40க்கு விற்ற குவார்ட்டர் மது ரூ. 110க்கும், ரூ. 70க்கு விற்ற பாட்டில் ரூ. 180ம், பீர் ரூ. 70ல் இருந்து 120 முதல் விற்கிறது. பிரபலமான பீர் வகைகள் இருமடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வளவு விலை கொடுத்து எப்படி வாங்குவது என்று கேள்வி எழுப்பி கடைக்காரர்களுடன் தகராறில் ஈடுபடும் சம்பவமும் நடக்கிறது. அதனால் வாங்குவதை தவிர்த்து விட்டோம்" என்கின்றனர்.

அதே நேரத்தில் ஊரடங்கால் வெளிமாநில மக்களின் வருகை புதுவையில் முற்றிலுமாக நின்றுள்ளது. அதுவும் மதுக்கடைகளில் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

மதுவை தவிர்த்து சாராயத்தை நாடும் மதுபிரியர்கள்- அலைமோதும் திருவிழா கூட்டம்

புதுச்சேரியில் மதுவிலை உயர்வால் மதுவை தவிர்த்து சாராயக்கடைகளில் மதுபிரியர்கள் அலைமோதுவதால் திருவிழா கூட்டம் காணப்படுகிறது.

சாராயக்கடை காலை பத்து மணிக்கு திறக்கும் முன்பே இன்று காலை 8 மணியில் இருந்து மதுப்பிரியர்கள் காத்திருந்தனர். பத்து வரிசை வைத்து சமூக இடைவெளியில் சாராயம் குவார்ட்டர் பாட்டிலாக விற்பனையாகிறது.

சாராயக்கடை வாசலில் வரிசையில் காத்திருப்போர் கூறுகையில், மதுவிலையை அதிகரித்ததால் சாராயத்தை நாடி வந்துள்ளோம். இரண்டும் சாப்பிட்டால் போதை தான். அதனால் மது விலை குறையும் வரை இனி சாராயம்தான். சாராயம் குவார்ட்டர் பாட்டில் ரூ.40க்கு கிடைக்கிறது. சீல்வைக்கப்பட்ட முழு பாட்டில் ரூ.160 முதல் ரூ.180க்கு விற்கப்படுகிறது. அதனால் சாராயக்கடையை நாடி வந்துள்ளோம்" என்கின்றனர்.

சாராயக் கடை உரிமையாளர்கள் கூறுகையில், ஊரடங்குக்கு பிறகு தற்போது சாராயக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசு வடிசாராய ஆலையில் இருந்து முன்பு ஆயிரம் லிட்டர் சாராயம் தருவார்கள். தற்போது கையிருப்பு 150 லிட்டர்தான் உள்ளது. அரசு முன்புபோல் சாராயம் தந்தால்தான் மதுபிரியர்களுக்கு விநியோகிக்க முடியும். கூட்டம் அதிகமாக உள்ளதால் அனைவருக்கும் சாராயம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

பலரும் கிடைக்காமல் ஏமாற்றமடைவார்கள். சாராயம் தட்டுப்பாடால் ஒருவருக்கு ஒரு குவார்ட்டர் மட்டுமே தருகிறோம். ஏராளமானோர் சாராயம் வாங்க குவிந்ததால் கடைகளில் திருவிழா கூட்டம் போல் காணப்படுகிறது." என்று குறிப்பிட்டனர்.

சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "கடந்த காலத்தில் சாராய நுகர்வோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே புதுவையிலேயே சில மதுபானங்களை தயாரிக்க வைத்து குறைந்த விலையில் மதுபானங்களை விற்பனை செய்தனர். இதனால் சாராயம் குடிப்போரின் எண்ணிக்கையும், சாராயக்கடைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.

நகர பகுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சாராயக்கடைகள் உள்ளது. ஆனால் தற்போதைய விலையேற்றம் சாராயக்கடைகளுக்கு புதிய மவுசை கொடுத்துள்ளது." என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x