Published : 03 Aug 2015 12:19 PM
Last Updated : 03 Aug 2015 12:19 PM

கரூர் வெங்கக்கல்பட்டி புதிய மேம்பாலத்தில் அறிவிப்பின்றி தொடங்கிய போக்குவரத்து: பாலத்தின் கீழும் வாகனங்கள் கடப்பதால் விபத்து அபாயம்

நீண்ட இழுபறிக்குப் பிறகு கரூர் வெங்கக்கல்பட்டி புதிய மேம்பாலப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிய பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் எவ்வித அறிவிப்புமின்றி போக்குவரத்து தொடங்கிவிட்டது.

மேம்பாலத்தின் கீழே ஏற்கெனவே போக்குவரத்து நடைபெற்றுவரும் பகுதியிலும் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளதால் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்து போக்குவரத்தை தடை செய்யவேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் சுக்காலியூரில் இருந்து வீரராக்கியம் வரை 4 வழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதற்காக கரூர்- திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டியில் மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேம்பாலப் பணிகள் தாமதமாக தொடங்கியது.

இந்நிலையில் கரூர் சுக்காலியூர் வீரராக்கியம் புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்த நிலையில், வெங்கக்கல்பட்டி மேம்பாலப்பணி முடிவடையாததால் புதிய மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில மீட்டர் தூரத்துக்கு சாலை மையத்தடுப்பு அகற்றப்பட்டு அதன் வழியே வாகனங்கள் சாலையைக் கடந்துவந்தன.

வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ்பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்டப்பணி குழாய்கள் சென்றதால் அதற்கு மாற்று குழாய் அமைத்து இணைப்புகளை மாற்றி அதன்பின் பணிகள் தொடங்கி, ஒரு வழியாக அண்மையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. பாலத்தை சாலையுடன் இணைக்கும் பகுதியில் மண் கொட்டி சமப்படுத்தும் பணிகள், பாலத்தின் கைப்பிடிச் சுவரில் கருப்புக் கோடிடும் பணிகள் நடந்துவருகின்றன.

பாலப்பணிகள் நீண்டநாள் இழுப்பறிக்கு பின் முடிவடைந்ததாலும், பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு தடையேதும் இல்லாததாலும் கடந்த சில நாட்களாக புதிய பாலத்தில் அனைத்து வாகனங்களும் சென்றுவருகின்றன. தற்போது புதிய பாலத்தில் வாகனங்கள் செல்லும் நிலையில் பாலத்தின் கீழேயும் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சாலையைக் கடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இப்பகுதியில் சாலை மையத்தடுப்பு அமைத்து போக்குவரத்தை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய கரூர் திட்டப்பிரிவு அலுவலகத்தில் விசாரித்தபோது, “வெங்கக்கல்பட்டி புதிய மேம்பாலப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்காக அகற்றப்பட்டிருந்த தடுப்பு மீண்டும் அமைக்கப்பட்டு அவ்வழியே போக்குவரத்து நடைபெறுவது தடை செய்யப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x