Published : 26 May 2020 07:19 AM
Last Updated : 26 May 2020 07:19 AM

ராணுவ வீரரை அவமரியாதையாக பேசியதாக எஸ்.ஐ. மீது புகார்- ஆடியோ வெளியானது பற்றி எஸ்.பி. விளக்கம்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் அரு மனை காவல் நிலைய எஸ்.ஐ. சுரேஷ்குமார். இவருக்கும், ராணுவ வீரரான அருமனை ஆறவிளையைச் சேர்ந்த கிங்ஸ் என்பவருக்கும் இடையேயான செல்போன் உரையாடல் பதிவு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கிங்ஸின் சித்தி சுதாவை, அவரது கணவர் வில்சன் துன்புறுத்தி யதால், அருமனையில் உள்ள கிங்ஸ் வீட்டுக்கு சுதா வந்துள்ளார். அங்கு ஆயுதத்துடன் வந்து வில்சன் மிரட்டிச் சென்றுள்ளார். இதுதொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, எஸ்.ஐ. சுரேஷ்குமாரிடம், செல்போனில் கிங்ஸ் கூறுகிறார். அப்போது, ராணுவ வீரரை கொச்சைப்படுத்தி, எஸ்.ஐ பேசும் உரையாடல் செல்போனில் பதிவு செய்யப்பட்டு வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவான்ஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், நாட்டை காக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருக்கும் ராணுவ வீரரை, அருமனை எஸ்.ஐ. மரியாதையின்றி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை 5 மணிக்கு வீட்டுக்கு அரிவாளோடு வந்த நபர் குறித்து, ராணுவ வீரர் புகார் கூறியபோது, உனக்கு என்ன செய்ய வேண்டும். எனக்கு ஆர்டர் போடுகிறாயா, என எஸ்.ஐ. கேட்டுள்ளார். இதற்கு, ஆர்டர் இல்லை சார். உங்களிடம் கேட்டு புகார் அளிக்க சொல்வதற்கு தான் கேட்டேன் என ராணுவ வீரர் சொல்ல... அதற்கு அவரை தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே, எஸ்.ஐயை மன்னிக்கக் கூடாது. காவல் துறையினர் அவரை காப்பாற்றும் நோக்குடன் செயல்படுகின்றனர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில், சுதா நேற்று முன்தினம் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அவரின் கணவர் வில்சன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து, இந்து தமிழ் நாளிதழிடம், குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் கூறுகையில், சம்பவம் குறித்து முறையாக காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் பலமுறை ராணுவ வீரர் கிங்ஸ், எஸ்.ஐ. சுரேஷ்குமாரிடம் செல்போனில் பேசியுள்ளார். முறையாக புகார் அளித்திருந்தால் அது தொடர்பாக நட வடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், தங்களுக்கு சாதகமான ஒரு உரையாடலை மட்டும் வலை தளங்களில் பரப்பி வருகின்றனர். ஒரு ராணுவ வீரரை அவதூறாக பேசுவதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக, எஸ்.ஐ.க்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து 24-ம் தேதி தான் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார். அதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x