

ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அந்தியூர் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் 10,000-க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து விழுந்தன.
ஈரோடு மாவட்டம் கோபியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக் காற்று வீசியது. இதில், ஆலாங்காட்டுப்புதூர், கடுக்காம் பாளையம், பரமக்காட்டூர் மற்றும் குட்டியாக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப் பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்யவிருந்த மொந்தன், கதளி, தேன்கதிர், பூவாழை மற்றும் செவ்வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “ஆண்டுதோறும் சூறாவளிக் காற்றினால் வாழைகள் சேதமடைவதும், அதனை வருவாய்துறையினர் கணக்கெடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால், இதுவரை தமிழக அரசு சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. எனவே, இந்த ஆண்டு தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டதை தமிழக அரசு அமல் படுத்தவேண்டும்.
ஊரடங்கு காரணமாக, கடந்த இருமாதங்களாக அறுவடை செய்யப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்ய வழியில்லாமல் பாதிக்கப்பட்டோம். இந்த வாரம் முதல்தான் வாழைத்தார்களுக்கு ஓரளவு விலை கிடைக்கும் நிலையில், சூறாவளிக் காற்று வாழைமரங்களை அழித்துள்ளது” என்றனர்.
இதேபோல, அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக தோட்டங்களில் விளைந்திருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. மேலும், சாலையோரத்தில் இருந்த பழமையான மரங்கள் முறிந்து மின்சாரக் கம்பங்களின் மீது விழுந்ததன் காரணமாக மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சாலைகளில் முறிந்து விழுந்திருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை மின் பணியாளர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.