

அருணாச்சலப் பிரதேசத்தில் பணியின் போது வீர மரணம் அடைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அண்ணாமலையின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "18.8.2015 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம், டாம்டெங் என்ற இடத்திலிருந்து யங்ட்சே என்ற இடம் வரை ராணுவ பொறியாளர்கள் படைக்குழு வான் வழியே கம்பிவடம் அமைக்கும் பணியினை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் அக்குழுவினை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த வேலூர் மாவட்டம், பெரியபாளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் படைக்குழு சுபேதார் அண்ணாமலை என்பவர் தனது குழுவினர்கள் அனைவரையும் பத்திரமாக காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிய பிறகு, எதிர்பாராமல் வழுக்கி பாறை மீது விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
பணியின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுபேதார் அண்ணாமலை அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணியின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுபேதார் அண்ணாமலை குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உடல் வந்தது
ராணுவ வீரர் சுபேதர் ஜி.அண்ணா மலையின் உடல், விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. வேலூர் மாவட்டம் பெரியம்பாலம்பாக்கத்தில் அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.