

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஏனாதி கரம்பை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் (52).
கரோனா ஊரடங்கு உத்தரவால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழரசன் தனது ஊரில் இருந்து தினமும் 25 கிலோ மீட்டர் தொலை இரு சக்கர வாகனத்தில் சென்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள 25 மாணவ, மாணவிகளின் வீடுகளில் பாடம் நடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்து பேசுகிறார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் ஏனாதி கரம்பை மற்றும் சுற்றுப்புற பகுதி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கும் பணியிலும் தமிழரசன் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் தமிழரசன் கூறியதாவது: என் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களின் வீடுகளுக்கும் சென்று, அவர்களுடையை செயல்பாடுகள் குறித்து பெற்றோர்களிடம் கேட்டறிந்து, மாணவர்கள் படிக்க ஊக்கம் அளித்து வருகிறேன். மேலும், பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேங்களைத் தீர்த்து வைத்துவிட்டு, அவர்கள் தேர்வெழுத தேவையான எழுதுபொருட்களை வாங்கிக் கொடுத்து வருகிறேன். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இதனால் எனக்கும், மாணவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஆசிரியர் தமிழரசன் கூறினார்.