Published : 25 May 2020 07:27 PM
Last Updated : 25 May 2020 07:27 PM

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக உயர்வு; மேலும் 7 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (மே 25) மாநிலத்தில் இன்றைய கரோனா விவரம் குறித்து காணொலிக் காட்சி மூலம் பேசியதாவது:

"தமிழகத்தில் உள்ள 712 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரு நாளில் 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களைச் சோதனைச்சாவடிகளிலேயே சோதிக்கிறோம். அப்படி சோதித்தவர்களில் 87 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர், குஜராத்திலிருந்து வந்த 3 பேர் என, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 93 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று 712 உடன், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 93 பேரையும் சேர்த்து இன்று மொத்தமாக 805 பேருக்கு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 491. பெண்கள் 314.

இன்று மட்டும் 407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8,731 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்றைக்கு 7 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 5 பேர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

11 ஆயிரத்து 835 கரோனா பரிசோதனைகள் இன்று செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக பரிசோதனை செய்யப்படுகின்றது. 4 லட்சத்து 21 ஆயிரத்து 480 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 68 பரிசோதனை மையங்கள் உள்ளன.

கரோனாவால் ஏற்கெனவே 111 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 7 பேருடன் சேர்த்து பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

தொடர்ச்சியாக அதிக பரிசோதனைகள் செய்து வருகிறோம். தொற்று உள்ளவர்களை விரைவாகக் கண்டறிதல், நல்ல சிகிச்சை அளித்தல், குணமடையச் செய்தல், இதுதான் தமிழகத்தின் முக்கியமான நடவடிக்கைகள். பல மாவட்டங்களில் புதிய நோய்த்தொற்று இல்லாமல் முழுமையாக கட்டுப்படுத்தி மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

உள்நாட்டு விமான சேவை தொடங்கியிருப்பது புதிய சவாலாக உள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து தமிழர்கள் இ-பாஸ் வாங்கிக்கொண்டு தமிழகத்திற்கு வருகின்றனர். அவர்களை செக்போஸ்ட்டிலேயே முழுமையாக பரிசோதிக்கிறோம். இதுவரை விமானங்கள், ரயில்கள் மூலம் நம் மாநிலத்திற்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 942 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மகாராஷ்டிராவிலிருந்து வந்த 726 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்திலிருந்து வந்த 21 பேருக்கு பாசிட்டிவ் உள்ளது. டெல்லியிலிருந்து வந்த 15 பேர், மேற்கு வங்காளத்திலிருந்து வந்த 19 பேர் என பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு தொற்று உள்ளது. அவர்களையும் அவர்கள் சார்ந்தவர்களையும் கண்காணித்து வருகிறோம்.

உள்நாட்டு விமானங்கள் இன்றிலிருந்து இயங்குகின்றன. வெளிமாநிலங்களில் உள்ளவர்களை பலகட்டமாக தமிழகத்திற்கு வர வைக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இது மற்றொரு புதிய சவால். ஒருநாளைக்கு 25 விமானங்களுக்கு மேல் தமிழகத்திற்கு இயக்க அனுமதிக்கக் கூடாது என மாநில அரசு கூறியுள்ளது. அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

ஆனால், இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் இல்லை. எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கலாம்.

வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை விமான நிலையங்களில் மருத்துவக் குழுவினர் தெர்மல் ஸ்கேனிங் செய்கின்றனர். அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படும். அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு தேதியுடன் அழியாத மை கொண்டு ஸ்டாம்ப் செய்யப்படும். அவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு மட்டும் 486 பேர் தமிழகத்திற்கு விமானங்கள் மூலம் வந்துள்ளனர். 16 விமானங்கள் மூலம், கிட்டத்தட்ட 1,400 பேருக்கு மேல் வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். இங்கிருந்து செல்பவர்களையும் சோதனை செய்துதான் அனுப்புகிறோம். பல்வேறு துறைகளைச் சேர்த்து பல குழுக்களை ஒன்றிணைத்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போதுதான் தரவுகள் கிடைக்கும். அதனை அடிப்படையாக வைத்துதான், பல ஆராய்ச்சிகளை செய்து அதன் முடிவுகளின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும். மத்திய அரசு நம்மை இதற்காக மிகவும் பாராட்டுகின்றனர். என்ஐவி, உலக சுகாதார மையம் பாராட்டுகின்றன.

அதிகமான தொற்றுகள் இருப்பது குறித்து கவலைப்படாமல் அதிகமாக பரிசோதிக்கச் சொல்கின்றனர். சிகிச்சை, சோதனைகளைத் தாண்டி கடந்த 3 மாதங்களாக பெரிய ஆராய்ச்சியை தமிழக மருத்துவர்கள் வல்லுநர்கள் குழு செய்து வருகிறது.

அந்த ஆராய்ச்சிகளின்படி, நோய்த்தொற்று உள்ளவர்களில் 88% பேருக்கு அறிகுறிகள் இல்லை. 12% பேருக்குதான் அறிகுறிகள் உள்ளன.

அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, 40% பேருக்கு காய்ச்சல், 37% பேருக்கு இருமல், 10% பேருக்கு தொண்டை வலி, 9% பேருக்கு மூச்சுத்திணறல், 4% பேருக்கு மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளன.

இறப்பு குறித்து வல்லுநர்கள் குழு, மாவட்ட வாரியாகவும், மாநில வாரியாகவும் ஆய்வு செய்துள்ளனர். ஏற்கெனவே நீண்ட கால நோயுள்ள 84% பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இறந்த 16% பேருக்கு வேறு நோய்கள் இல்லை.

இந்த 84 சதவீதத்தில் கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக இறந்துள்ளனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட 11 நோய்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

இந்நோய்கள் உள்ளவர்களையும் முதியவர்களையும் பொத்திப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் நேரத்திற்கு மருந்து உட்கொள்ள வேண்டும். தங்களின் நோயின் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

வயது வாரியாக பார்த்தால், 60 வயதுக்கு மேல் உள்ள 50 சதவீதத்தினர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலேயே ஏன் உலக அளவில் தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவு. அரசு செயலாளர்கள் மத்திய அரசுக்கு இதுகுறித்து விளக்கினர். பிற மாநிலங்களுடன் இதுகுறித்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம்.

இந்த ஆய்வில் நிறைய உழைப்புகள் உள்ளன. அடுத்து 3 மாதத்திற்கு தமிழகத்தில் கரோனா தொற்று எப்படி இருக்கும் என்பதையும் ஆய்வு செய்துள்ளனர். அதற்கு தமிழகத்தில் என்னென்ன சுகாதார வசதிகள் வேண்டும் என்பதையும் ஆராய்ந்துள்ளனர். தரவுகளை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கிறோம்.

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x