Published : 25 May 2020 06:06 PM
Last Updated : 25 May 2020 06:06 PM

சிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு: தமிழக பாஜக தலைவர் இரங்கல்

சிங்கம்பட்டி மன்னர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மன்னர் ஆட்சி முறையில் இந்தியாவில் முடிசூட்டப்பட்ட கடைசி மன்னர், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கம்பட்டி ஜமீன் அரசர்.

விடுதலைக்குப் போராடிய வீரப் பேரரசி வேலுநாச்சியார், மற்றும் விவேகானந்த சுவாமியை சிக்காகோ அனுப்பிய இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி ஆகியோருகு நேரடி உறவுக்காரர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியை காக்கும் பொறுப்பு ராமநாதபுரம் ராஜாவுக்கு உண்டு. அதனால் அவர் சேதுபதி. அதுபோல தாமிரபரணி ஆற்றின் புனிதத் தலங்களை காக்கும் இவர் தீர்த்தபதி.

அரும்பெரும் சிந்தனையாளர், கொடையாளர், மிகுந்த ஆங்கிலப் புலமை மிக்கவர், தமிழுக்கும் சைவத்துக்கும் பாடுபட்டவர், அனைத்து ஆன்மீக சமூக இயக்கங்களுக்கும் துணை நின்றவர், இங்கிலாந்தில் பயின்றவர். மேற்கு தொடர்ச்சி மலையின் 80ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்திற்கு உரிமையாளர்.

பல லட்சம் மக்கள் கூடும் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலின் பரம்பரை அறங்காவலர், சாதி,மத , இன வேறுபாடு பார்க்காமல் அனைவரிடத்தும் அன்புடன் பழகி வந்தவர். அன்னாரின் மறைவுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தம் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசி மன்னர் என்ற முறையில் அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x