

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக மக்கள் வருகைக்குத் தடை போட்டுள்ளனர் அதிகாரிகள். பூங்காவைப் பராமரிக்கும் ஊழியர்கள், அரசுத் துறை ஊழியர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இந்தப் பகுதியில் சிறுத்தைகள் சுற்றித் திரிவது இப்பகுதி மக்களையும் தோட்டக்கலைத் துறை ஊழியர்களையும் பீதியில் உறையவைத்திருக்கிறது.
குறிப்பாக, நேற்று முன்தினம் அதிகாலையில் தென்பட்ட சிறுத்தையைக் கண்டு பதற்றமடைந்த பொதுமக்கள், அதைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் காடுகளால் நிறைந்தது. வனப்பரப்பு குறைந்து மக்கள் வாழிடம் மிகுதியானதால் வனவிலங்குகள், உணவிற்காகக் குடியிருப்புகளுக்குள் வருவது வாடிக்கையாகி உள்ளது. குறிப்பாக, ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் காட்டு மாடுகள் ஊருக்குள்ளேயே வலம் வருகின்றன. கரடி, சிறுத்தை, புலி போன்ற மிருகங்கள் ஊருக்குள் நுழைந்து ஆடு, மாடு போன்றவற்றைக் கொல்வதுடன் மனிதர்களையும் தாக்கிவிடுகின்றன. இதனால், மனித - விலங்கு மோதல் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாகக் கரோனா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், கழுதைப்புலி, எறும்புத் தின்னி என்று அழைக்கப்படும் அலங்கு போன்ற விலங்குகள்கூட சாலையில் வலம் வருகின்றன. கடந்த வாரம் தாவரவியல் பூங்காவின் அருகில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள், காலில் காயத்துடன் ஒரு சிறுத்தை நடக்க முடியாமல் நடந்து சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து வெளியேறிய அந்தச் சிறுத்தை, மறுநாள் அருகில் இருக்கும் சாலையில் நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தது. சிறுத்தையை வனப் பகுதிகளுக்குள் விரட்ட மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. பின்னர், மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையைப் பிடித்த மருத்துவர்கள், பக்கத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். கரடி அல்லது வேறு விலங்குடன் சண்டையிட்டதன் மூலம் அந்தச் சிறுத்தையின் காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் நேற்று முன்தினம் காலை தாவரவியல் பூங்காவின் பக்கத்திலேயே ஒரு சிறுத்தையைப் பொதுமக்கள் பார்த்துள்ளனர். “இந்தச் சிறுத்தை இப்போது சிகிச்சையில் உள்ள சிறுத்தையின் ஜோடியாக இருக்கலாம்; அதைத் தேடித்தான் இந்தச் சிறுத்தை அலைகிறது. இது மனிதர்கள் மீதோ, வளர்ப்பு மிருங்கள் மீதோ தாக்குதல் நடத்தலாம். எனவே, இதைக் கூண்டு வைத்து உடனே பிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர் இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து தாவரவியல் பூங்கா ஊழியர் ஒருவர் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாகவே இங்கே சிறுத்தைகள் சுற்றி வருவதாகப் பொதுமக்கள் எங்களிடம் சொல்லி வருகின்றனர். சில சமயம் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்கூட சிறுத்தையைப் பார்த்ததாகச் சொல்லியுள்ளனர். நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. இந்நிலையில், அடுத்தடுத்து இரண்டு சிறுத்தைப் புலிகள் மக்கள் பார்வையில் பட்டிருக்கின்றன. கரோனா ஊரடங்கு காரணமாய் பூங்காவில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மக்கள் கூட்டம் இருக்கும் சமயத்தில் சிறுத்தைகள் நடமாடினால், விபரீதங்கள் ஏற்படும். ஊரடங்கு தளர்த்தப்பட்டு பூங்கா திறக்கப்பட்ட பின்னர் இங்கே கூட்டம் குவிவது நிச்சயம். அதற்குள் சோதனை நடத்தி சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளைப் பிடித்து, அடர் வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்.